செய்திகள்
தந்தையின் சிலை அருகே தாயுடன் மணமகள் லெட்சுமி பிரபா மணமகன் கிஷோர்.

திருமண விழாவில் நெகிழ்ச்சி: தந்தை சிலையுடன் மேடைக்கு வந்து தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சகோதரி

Published On 2021-02-02 02:07 GMT   |   Update On 2021-02-02 02:07 GMT
பட்டுக்கோட்டையில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் தந்தை சிலையுடன் மேடைக்கு வந்த மூத்த சகோதரி தனது தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பட்டுக்கோட்டை :

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்தவர் செல்வம். தொழில் அதிபர். இவருடைய மனைவி கலாவதி. கடந்த 2012-ம் ஆண்டு செல்வம் இறந்து விட்டார்.செல்வம் உயிருடன் இருந்தபோது தனது 3 மகள்களில் 2 மகள்களுக்கு திருமணம் செய்து முடித்து விட்டார். இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு செல்வத்தின் 3-வது மகள் லெட்சுமிபிரபாவுக்கும், கிஷோர் என்பவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

திருமணத்தின்போது தந்தை இல்லாததை எண்ணி லெட்சுமி பிரபா வருத்தமாக காணப்பட்டார். தங்கையின் வருத்தத்தை அறிந்துகொண்ட லண்டனில் டாக்டராக உள்ள மூத்த சகோதரி புவனேஸ்வரி,  அவருடைய கணவர் கார்த்திக் ஆகிய இருவரும் லெட்சுமி பிரபாவின் வருத்தத்தை போக்க முடிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து இறந்த செல்வத்தின் உருவத்தை சிலையாக உருவாக்க முடிவு செய்து பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சிலையை வடிவமைத்தனர். ரூ.6 லட்சம் செலவில் சிலிக்கான் மற்றும் ரப்பரால் இந்த சிலை உருவானது.

பட்டுக்கோட்டையில் நேற்று நடந்த தங்கை லெட்சுமி பிரபா திருமண வரவேற்பு விழாவின்போது மணமக்கள் முன்பாக தந்தையின் முழு உருவ சிலையை புவனேஸ்வரி திடீரென்று மேடைக்கு கொண்டு வந்து தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தந்தையின் சிலையை பார்த்த லெட்சுமி பிரபா கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் தந்தையின் சிலை முன்பு மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டு தந்தை சிலைக்கு அருகே தாயை நிற்க வைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். இந்த சம்பவம் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News