செய்திகள்
ஊட்டி மார்லிமந்து அணையை காணலாம்

ஊட்டியில் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது- அதிகாரிகள் தகவல்

Published On 2021-02-01 04:54 GMT   |   Update On 2021-02-01 04:54 GMT
ஊட்டி அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளதால், கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:

ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், ஓட்டல்கள் உள்ளன.

ஊட்டி நகரின் குடிநீர் தேவையை பார்சன்ஸ்வேலி அணை, டைகர் ஹில் அணை, கோரிசோலா அணை, மார்லிமந்து அணை உள்ளிட்ட அணைகள் பூர்த்தி செய்து வருகிறது. குறிப்பாக பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் நகருக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதற்காக நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக மலை உச்சியில் வசிக்கும் மக்களுக்கு அதிக திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்தது. காலநிலை மாறி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை மழை பெய்தது.

போதிய அளவு மழை பெய்ததால் அணைகளில் தண்ணீர் இருப்பு அதிகமாக உள்ளது. 50 அடி உயரம் கொண்ட பார்சன்ஸ்வேலி அணையில் 41 அடிக்கு நீர்மட்டம் உள்ளது.

23 அடி உயரம் கொண்ட மார்லிமந்து அணையில் 13.5 அடிக்கும், 39 அடி உயரம் கொண்ட டைகர் ஹில் அணையில் 38.5 அடிக்கும், 31 அடி உயரம் கொண்ட தொட்டபெட்டா அப்பர் அணையில் 23 அடிக்கும் நீர்மட்டம் இருக்கிறது. 35 அடி உயரம் கொண்ட கோரிசோலா அணையில் 11 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. மற்ற அணைகளிலும் தண்ணீர் போதியளவு உள்ளதால், கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. கடந்த ஆண்டு ஊரடங்கால் கோடை சீசன் ரத்தானது. நடப்பாண்டில் சீசன் நடந்தாலும் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News