செய்திகள்
கிராமிய சமையல் குழுவுடன் ராகுல் காந்தி

கிராமத்து இளைஞர்களுடன் சமையலில் கலக்கிய ராகுல்

Published On 2021-01-30 05:02 GMT   |   Update On 2021-01-30 09:45 GMT
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி, கிராமிய சமையல் குழுவினருடன் சமைத்து சாப்பிடும் வீடியோ வெளியாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
நல்லா இருக்கு... ரொம்ப நல்லா இருக்கு.. என்று சிரமப்பட்டு தமிழில் பேசினாலும், அட ராகுல்காந்தியா இப்படி பேசுறாரு...? என்று சமையல் கலைஞர்கள் அசந்து போனார்கள்.

வாங்க ராகுல்ஜி சாப்பிடலாம்! என்றதும் இப்படியெல்லாம் இருக்கும் என்று ராகுலும் நினைத்து இருக்க மாட்டார்.  இப்படியெல்லாம் சாதாரணமாக நடந்து கொள்வார் என்று சமையல் செய்தவர்களும் கற்பனையில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

கடந்த வாரம் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது கரூர் தொகுதியில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு  இருந்தது.

கிராமத்து மண் பானையில் சமையல் செய்து கொடுக்க கரூர் எம்.பி. ஜோதிமணிக்கு ஆசை. ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் அது கை விடப்பட்டது.

அந்த நேரத்தில் சாதாரண கிராமத்து இளைஞர்கள் சிலர் சேர்ந்து சமையலுக்காக தனி யூடியூப் சேனல் நடத்துவதை அறிந்ததும் அவர்களைப் பற்றி விசாரித்து அவர்களையே ஏற்பாடு செய்துள்ளார்.

அக்கா... உண்மையாவா?

எங்கள் சமையலை சாப்பிட ராகுல் வருவாரா...? என்று ஆச்சரியப்பட்டுப்போனார்கள்.

தம்பிங்களா...

கண்டிப்பா வருவாரு என்று ஜோதிமணியும் உறுதி அளித்தார்.

சரி. அவருக்கு என்ன பிடிக்கும்...? என்ன மாதிரி உணவு தயாரிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.

அதெல்லாம் எதுவும் வேண்டாம். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதையே தயார் செய்யுங்கள் என்று கூறி விட்டனர்.

அப்புறமென்ன... சமையலுக்கு தயாராகி விட்டார்கள். தளவாய்பாளையம் மெயின் ரோட்டின் அருகில் இருக்கும் முருங்கை மர தோட்டத்தை தேர்வு செய்து அங்கேயே சமைத்தார்கள்.

காளான் பிரியாணி, ரைத்தா தயார் பண்ணினார்கள். காளான் பிரியாணி வெந்து தயாராகி கொண்டிருந்த நேரம்...

ராகுல் காந்தி சாப்பிடுவதற்காக தோட்டத்துக்குள் வந்தார்.

சுற்றிலும் முருங்கை மரங்கள்...

சுத்தமான கிராமத்து தென்றல் காற்று....

அந்த அனுபவத்தை ரசித்தபடியே சமையல் கலைஞர்கள் அருகில் சென்றவர், தனக்கும் அவர்களுக்கும் இடைவெளி இருக்க கூடாது என்பதற்காக அவர்கள் அருகில் சென்று அவரும் ஒத்தாசை செய்ய தொடங்கி விட்டார்.

என்ன சமையல் என்று கேட்டதும், காளான் பிரியாணி என்றார்கள். அதை கிளறிவிட்ட போது பிரியாணி வாசனை காற்றில் மிதந்து கமகமத்தது.

அந்த வாசனையை நுகர்ந்த படியே “வாசனை தூக்குதே” என்றார் சிரித்துக் கொண்டு.

ரைத்தாவுக்கு வெங்காயத்தை நறுக்கி வைத்து இருந்தார்கள். நானும் உதவி செய்யட்டுமா? என்றபடி ரைத்தா தயாரிப்பில் இறங்கி விட்டார்.

மூலப்பொருட்கள் ஒவ்வொன்றையும் தமிழில் சொல்ல ஆசை. அதன் படியே ஒவ்வொன்றையும் கேட்டு ‘வெங்காயம்’ என்று சொல்லியபடி நறுக்கிய  வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் கொட்டினார். அடுத்ததாக மண் சட்டியில் இருந்த தயிரை கையில் எடுத்து ‘தயிர்’ என்றபடி அதையும் ஊற்றினார். அதன் பிறகு ‘கல் உப்பு’ என்றபடி உப்பையும் எடுத்து போட்டு கைதேர்ந்த சமையல் கலைஞரை போல் கிளறி விட்டார். பின்னர் அதை எடுத்து ருசித்து உப்பு சரியாக இருக்கிறதா? என்று பார்த்தார்.


எல்லாம் ‘பெர்பெக்டா’ இருக்கிறதே என்று ராகுல் சிரிக்க... சமையல் கலைஞர்களும் உங்கள் கை பக்குவமல்லவா? என்று சிரித்தனர்.

அதைத் தொடர்ந்து சாப்பிட தயாரானார்கள். சுற்றிலும் தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட திறந்த வெளியில் ஓலைப்பாயை தரையில் விரித்தார்கள்.

அதில் அமர்ந்த ராகுல் அவர்களையும் அருகில் அமர வைத்துக் கொண்டார்.

தலைவாழை இலை போடப்பட்டது. இலையில் தண்ணீர் தொளித்து சுத்தப்படுத்திக் கொண்டார். சுடசுட காளான் பிரியாணியை பரிமாறியதும் எடுத்து ருசித்தபடியே சூப்பரா இருக்கு என்பதை தமிழில் எப்படி சொல்ல வேண்டும் என்று அருகில் இருந்த ஜோதிமணியிடம் கேட்டு ‘நல்லா இருக்கு’ என்றார். மீண்டும் அதை விட சூப்பர் என்பதை எப்படி சொல்ல வேண்டும் என்பதை கேட்டு ரொம்ப நல்லா இருக்கு என்றார்.

அதை கேட்டதும் சமையல் கலைஞர்கள் மகிழ்ச்சியில் நன்றி கூறினார்கள்.

விடை பெற்று செல்லும் போது எனக்கு உங்களுடன் நிறைய நேரம் இருக்க இயலவில்லை. மீண்டும் வரும்போது உங்களோடு சேர்ந்து கொள்வேன் என்றார்.

சமையல் செய்து ஒளிபரப்பும் இந்த குழுவின் தலைவர் முதியவரான பெரியதம்பி. இவருடன் சுப்பிரமணியன், முருகேசன், அய்யனார், தமிழ்செல்வன், முத்துமாணிக்கம் ஆகியோரும் இதில் ஈடுபட்டுள்ளார்கள்.

இவர்கள் சேனலுக்கு 70 லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இந்த கிராமத்து இளைஞர்கள் இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் மற்றவர்களுக்கு உதவுவதோடு தங்கள் பாரம்பரிய தொழிலான விவசாய தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாப்பிடும் போதே உரையாடலும் தொடர்ந்தது. உங்கள் அடுத்த கனவு என்ன? என்று ராகுல் கேட்டதும், ‘வெளிநாடுகளில் சென்று சமைக்க ஆசை’ என்றார்கள்.

‘அப்படியானால் முதலில் எந்த நாட்டுக்கு போக ஆசைப்படுகிறீர்கள்’ என்று கேட்டார்.

‘அமெரிக்காவுக்கு’ என்றதும் அங்கு சிகாகோவில் இருக்கும் தனது நண்பர் மூலம் அவர்கள் ஆசையை நிறைவேற்றி வைக்க முயற்சிப்பதாக கூறினார்.

சிகாகோவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் தலைவராக இருப்பவர் சான்பிட்ராடோ. இவரது பூர்வீகம் குஜராத். ராஜீவ்காந்திக்கு நெருக்கமாக இருந்தவர். இப்போதும் ராகுலோடு நெருங்கிய நட்புடன் இருக்கிறார். அவர் மூலமாக இதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன் என்று ராகுல் கூறினார்.

காளான் பிரியாணிக்கு கத்தரிக்காய் குழம்பு, ரைத்தா வைத்திருந்ததை பார்த்ததும், சைவ பிரியாணி ஓ.கே. அப்படின்னா சிக்கன் பிரியாணியும் இதேபோல்தான் தயார் செய்ய வேண்டுமா? என்று தனது சந்தேகத்தை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டார் ராகுல்.

“இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதே போல் எங்களுடன் ராகுல் வந்து அமர்ந்து சாப்பிடுவதும் ஆச்சரியமாக  இருப்பதாக  அந்த இளைஞர்கள் தெரிவித்தனர்”

சாப்பிடும் போது ஓலைப் பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து இருந்தார்.

இது புதிய அனுபவம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட ராகுல், தாத்தா பெரியதம்பி உள்பட அனைத்து சமையல் கலைஞர்களின் கைகளை பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பாராட்டு தெரிவித்தார்.
Tags:    

Similar News