ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை அரசே வைத்துக்கொள்ளலாம் -உயர் நீதிமன்றம்
பதிவு: ஜனவரி 29, 2021 15:37
வேதா நிலையம்
சென்னை:
ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து தீபக்கும், இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து தீபாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். ஆனால், வழக்கு முடியும்வரை அந்த இல்லத்தில் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டார்.
திறப்பு விழா முடிந்த பின், வேதா நிலையத்தின் சாவியை சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும், அந்த பகுதியில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்த பேனர்களும் வைக்க கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்தும், வேதா நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கோரியும் அரசு தரப்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாவியை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதித்தனர்.
ஜெயலலிதா நினைவு இல்லத்தின் சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தேவையில்லை, அரசே வைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.
மேலும், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல் முறையீட்டு வழக்கில் தீபா, தீபக் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து, விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Related Tags :