செய்திகள்
கோப்புபடம்

போலி மசாஜ் சென்டர் நடத்தி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 7 பேர் கைது

Published On 2021-01-28 14:30 GMT   |   Update On 2021-01-28 14:30 GMT
போலி மசாஜ் சென்டர் நடத்தி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி மாநகரில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் போலி மசாஜ் சென்டர் நடத்தி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வரும் கும்பலை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். அவரது உத்தரவின்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டர்களில் போலீசார் சோதனை செய்தனர். இதன் காரணமாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் திருச்சி கண்டோன்மெண்ட் ராஜா காலனி பகுதியில் இயங்கி வந்த ரோஸ் பெட்டல் ஸ்பா என்ற மசாஜ் சென்டர், பொன்னகர் பகுதியில் இயங்கி வந்த மேக்ஸ் ஸ்பா என்ற மசாஜ் சென்டர், தில்லை நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 5-வது பிரதான சாலை பகுதியில் இயங்கி வந்த மேக்ஸ் ஆயுர்வேதிக் சென்டர் ஆகியவற்றில் சோதனை செய்தபோது, அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து பெண்களை வேலைக்கு அமர்த்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் பாதிக்கப்பட்ட 7 பெண்களை போலீசார் மீட்டனர். மேலும், பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக 3 ஆண்கள் 3 பெண்கள் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இது தவிர, மசாஜ் சென்டரை நடத்தி வந்த முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

இதேபோல் மசாஜ் சென்டர் கட்டிடங்களை வாடகைக்கு விட்ட 2 உரிமையாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களும் தேடப்பட்டு வருகிறார்கள். மாநகர் பகுதியில் இதுபோல் போலியான மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவது மீண்டும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் லோகநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி கே.கே. நகர் இந்திரா தெருவில் ரிலாக்ஸ் என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று சுப்பிரமணியபுரம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்த வினோத் காம்ப்ளி (வயது 28) என்ற வாலிபர் மசாஜ் செய்து கொள்வதற்காக அங்கு சென்றார். அப்போது மசாஜ் சென்டரின் உரிமையாளர் அங்கிருந்த பெண்ணிடம் விபசாரத்தில் ஈடுபட அழைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசில், வினோத் காம்ப்ளி அளித்த புகாரின்பேரில் உரிமையாளர் லீலா (64) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News