செய்திகள்
காய்கறி தோட்டம் அமைக்கும் வளாகத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்து தண்ணீர் ஊற்றிய காட்சி.

பள்ளி வளாகங்களில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2021-01-28 11:29 GMT   |   Update On 2021-01-28 11:29 GMT
ராமநாதபுரம் அருகே பள்ளி வளாகங்களில் காய்கறி- கீரை தோட்டம் அமைக்கும் பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், புத்தேந்தல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மாவட்டத்தில் பள்ளி வளாகங்களில் 1000 காய்கறி-கீரை தோட்டம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை பரப்புகளை அதிகரித் திடும் நோக்கில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பாக 429 ஊராட்சிகளில் 1000 குறுங்காடுகள் வளர்க்கும் திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தற்போது மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் காய்கறி மற்றும் கீரை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் 1000 காய்கறி- கீரை தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த தோட்டத்தில் காய்கறி, கீரை வகைகள், முருங்கை, பப்பாளி, கருவேப்பிலை போன்ற பயன்தரும் செடிகள், மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்பட உள்ளன. அதன்படி ராமநாதபுரம் அருகே புத்தேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 1000 காய்கறிகீரை தோட்டம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த கீரை, காய்கறிகள் வழங்குவதன் மூலம் வளர் இளம் பெண் குழந்தைகளுக்கு ரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் எனவும், நெடுங்கால பயனாக மகப்பேறு கால இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, தாய்-சேய் நலம் உறுதி செய்ய வாய்ப்பாக அமையும் என கலெக்டர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான பிரதீப் குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ரகுவீர கணபதி (வளர்ச்சி), வீரப்பன் (சிறுசேமிப்பு), அருள்சேகர் (சத்துணவுத் திட்டம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் ஜப்பார், ராஜேந்திரன், தாசில்தார் முருகவேல் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News