செய்திகள்
கோப்புபடம்

சங்ககிரி அருகே ஓய்வு பெற்ற வங்கி மேலாளரிடம் ரூ.9 லட்சம் திருடிய 2 பேர் கைது

Published On 2021-01-28 10:22 GMT   |   Update On 2021-01-28 10:22 GMT
சங்ககிரியில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளரிடம் ஓடும் பஸ்சில் ரூ.9 லட்சம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்ககிரி:

சேலம் நரசோதிபட்டி பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 65), ஒய்வு பெற்ற வங்கி மேலாளர். கடந்த 10-ந் தேதி இவர், தனது மனைவி ராஜேஸ்வரியுடன் (60) ஈரோட்டில் உள்ள மகள் வீட்டுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி கணவன்-மனைவி இருவரும் சேலத்தில் இருந்து அரசு பஸ்சில் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் அவர்கள் தங்கள் மகளின் தேவைக்காக ஒரு பேக்கில் ரூ.9 லட்சத்தையும் எடுத்து சென்றனர். சங்ககிரி புதிய பஸ் நிலையத்திற்கு சென்ற போது அந்த பஸ்சில் 4 பேர் ஏறினர்.

அவர்கள் வீரமணி, அவருடைய மனைவி ராஜேஸ்வரி அமர்ந்திருந்த இருக்கையின் அருகே நின்றனர். அப்போது அவர்களில் ஒருவர், கீழே 5 ரூபாய் நாணயம் விழுந்து விட்டது, அதை எடுக்க வேண்டும் உங்கள் பேக்கை எடுங்கள் என கூறினார். உடனே வீரமணி, பணம் வைத்திருந்த அந்த பேக்கை எடுத்து அவர் அமர்ந்திருந்த பஸ் இருக்கையின் மேலே வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.

இதைநோட்டமிட்ட அவர்கள் 4 பேரும், அந்த பேக்கிலிருந்து ரூ.9 லட்சத்தை திருடிக்கொண்டு சங்ககிரி பழைய பஸ் நிலையத்தில் இறங்கி கொண்டனர். வீரமணி ஈரோட்டுக்கு சென்று பேக்கில் இருந்த பணத்தை பார்த்த போது பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து அவர் சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் சங்ககிரி ஆர்.எஸ். பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக கூறினர். இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரிடமும் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர்.

அவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாண்டவராயன்பட்டி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 26), அதே பகுதியை சேர்ந்த சீனிவாச பாண்டியன் (45) என்பதும், அவர்கள் ஓடும் பஸ்சில் வங்கி மேலாளரிடம் ரூ.9 லட்சம் திருடியதையும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து திருட்டு பணம் ரூ.8 லட்சத்தை கைப்பற்றினர்.

மேலும் அவர்களுடன் இந்த திருட்டு வழக்கில் தமிழ்வாணன், பாலமுருகன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News