செய்திகள்
மெரினா கடற்கரையில் நம்ம சென்னை அடையாள சிற்பம்

மெரினா கடற்கரையில் ‘நம்ம சென்னை’ அடையாள சிற்பம்- எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Published On 2021-01-28 09:49 GMT   |   Update On 2021-01-28 09:49 GMT
நாட்டின் பெருநகரங்களான புதுடெல்லி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள சிற்பங்களின் தொடர்ச்சியாக சென்னையில் தற்பொழுது நம்ம சென்னை அடையாள சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையில் சென்னையின் பெருமையினையும் மாண்பினையும் கொண்டாடும் விதத்திலும், பொதுமக்கள் தாங்களே புகைப்படம் எடுத்து சென்னை மாநகரத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் எஸ்.டி.பிளஸ் ஆர்ட் இந்தியா பவுண்டே‌ஷன் நிறுவனத்தின் மூலம் நம்ம சென்னை என்கின்ற அடையாள சிற்பம் சென்னை சீர்மிகு நகரத்திட்ட நிதியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் காமராஜர் சாலை, ராணிமேரி கல்லூரி எதிரில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ‘நம்ம சென்னை’ என்கின்ற அடையாள சிற்பம், சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக திகழும். நாட்டின் பெருநகரங்களான புதுடெல்லி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள சிற்பங்களின் தொடர்ச்சியாக சென்னையில் தற்பொழுது நம்ம சென்னை அடையாள சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலே முதல் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சி மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து கொள்கையை செயல்படுத்தி வருகிறது. மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து கொள்கையை ஊக்குவிக்கும் வகையில் மிதிவண்டி பகிர்மானத் திட்டம் நகரத்திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மிதிவண்டி பகிர்மானத் திட்டமானது ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் 378 மிதிவண்டி நிலையங்களில் 5 ஆயிரம் மிதிவண்டிகளுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டு தற்பொழுது 78 மிதிவண்டி நிலையங்களில் 500 மிதிவண்டிகளுடன் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு சென்னை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து கொள்கையை ஊக்குவிக்கும் வகையில் மேலும் ஒரு மைல் கல்லாக சென்னை மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 500 இ-மிதிவண்டிகள், மற்றும் 500 அடுத்த தலைமுறைக்கான மிதிவண்டிகள் என மொத்தம் 1,000 மிதிவண்டிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தயார் நிலையில் உள்ளன.

இந்த இ-மிதிவண்டிகள் குறைந்த மனித சக்தியில் மின்கலம் மூலம் அதிவேகமாக இயங்கும் திறன் உடையது. அடுத்த தலைமுறைக்கான மிதிவண்டிகள் சக்கரங்கள் எளிதில் பழுதடையாத வகையிலும் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவில் அலுமினிய அலாய் தொழில் நுட்பத்தில் குறைந்த மனித சக்தியில் மிகவும் இலவகுவாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர்சிங், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News