செய்திகள்
திருநெல்வேலி ரெயில் நிலையம்

நெல்லையில் இருந்து 4 பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படுவது எப்போது?

Published On 2021-01-28 09:11 GMT   |   Update On 2021-01-28 09:11 GMT
நெல்லையில் இருந்து 4 பாசஞ்சர் ரெயில்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
நெல்லை:

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தொற்று குறையத்தொடங்கியதையடுத்து படிப்படியாக ரெயில்கள் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிறப்பு ரெயில்கள் என்ற பெயரில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால் பயணிகள் ரெயில்கள் பெரும்பாலானவை இயக்கப்படாமல் உள்ளன. போக்குவரத்து அடிப்படையில் குறைவான கட்டணத்தில் சென்று வரும் வகையில் அமைந்துள்ள சேவை இந்த பயணிகள் ரெயில் சேவை. குறைந்த கட்டணத்தில் பல கிலோமீட்டர் தூரம் சென்று வரலாம் என்பதால் நடுத்தர மக்களுக்கு மிகவும் உகந்ததாக இவை இருந்து வந்தது.

நெல்லை சந்திப்பில் இருந்து திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டைக்கு தினமும் பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்களின் சேவையும் கடந்த 10 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை-தூத்துக்குடி பயணிகள் ரெயிலும் இதுவரை இயக்கப்படவில்லை.

இதுதவிர நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் காலை மற்றும் மாலை என 2 முறை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயிலும் இதுவரை இயக்கப்படாமல் உள்ளது. இந்த 4 ரெயில்களும் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக நெல்லை-திருச்செந்தூர் இடையே பாசஞ்சர் ரெயில் ஒரு நாளைக்கு 8 முறை இயக்கப்பட்டு வந்தது.

இதனை பயன்படுத்தி செய்துங்கநல்லூர், தாதனூத்து, ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் வியாபாரம் நிமித்தமாக நெல்லைக்கு குறைந்த கட்டணத்தில் வந்து சென்றனர். ஏராளமான மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்களும் வந்து சென்றனர். ஆனால் இந்த ரெயில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரெயில்களை இயக்குவது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும், எம்.பி.க்களும் குரல் எழுப்பி வந்தாலும் இதுவரை அவற்றின் சேவை தொடங்கப்படவில்லை. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துவிட்ட நிலையில் இதுவரை திருச்செந்தூர் பயணிகள் ரெயில் இயக்கப்படவில்லை.

இதேபோல் நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு தினந்தோறும் இயக்கப்படும் பாசஞ்சர் ரெயிலும் இயக்கப்படவில்லை. இதனால் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பை, தென்காசி, செங்கோட்டைக்கு சென்று வரும் பயணிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்த ரெயில் இயக்கப்படாததால் தென்காசியில் இருந்து நெல்லைக்கு வேலைக்கு வரும் அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் சேர்ந்து படிப்பவர்கள் என பல தரப்பினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இந்த பயணிகள் ரெயில் சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ஊரடங்கு தளர்வாக பல பகுதிகளில் ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் நெல்லையிலிருந்து இயக்கப்பட வேண்டிய திருச்செந்தூர் மற்றும் செங்கோட்டை பயணிகள் ரெயில் இதுவரை இயக்கப்படாதது மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த காரணத்தினால் செங்கோட்டை மற்றும் திருச்செந்தூர் செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு சில தனியார் பஸ்கள் கூடுதலாக டிக்கெட் வசூல் செய்கிறது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பயணிகள் ரெயிலை உடனடியாக இயக்க தென்னக ரெயில்வே அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து செங்கோட்டை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செந்தில் ஆறுமுகம் கூறியதாவது:-

நெல்லை-செங்கோட்டை மற்றும் மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில்கள் இயங்காததால் வர்த்தக பாதிப்புகளுக்கு அளவே இல்லை. பொதுமக்களும் குறிப்பாக முதியோர்களும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவமனைகளுக்கு செல்வதற்கும் தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனை செய்ய செல்ல வேண்டிய நோயாளிகள் இந்த ரெயில்கள் இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர்.

தினமும் சென்று வரும் வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே ரெயில்வே நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக விதிகளுக்கு உட்பட்டு விரைவில் பாசஞ்சர் ரெயில்களை இயக்க வேண்டும்.

செங்கோட்டை ரெயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் கிருஷ்ணன்:-

மதுரை கோட்டத்திற்கு வசூலை அள்ளி தந்த முன்பதிவில்லாத செங்கோட்டை- மதுரை பயணிகள் ரெயில்கள் சேவை கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் இன்னும் தொடங்கப்படவில்லை.

செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், பாம்புகோவில்சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களின் பணியாளர்கள், சுற்றுலா மற்றும் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வோர், மருத்துவ ஆலோசனைக்கு மருத்துவ மனைகளுக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் அவதிப்படுகின்றனர்.

பாசஞ்சர் ரெயில்களை இயக்குவது தொடர்பாக மதுரை கோட்ட மேலாளரும், பொது மேலாளரும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் பரிந்துரை இல்லாமல் தெற்கு ரெயில்வே இந்த பயணிகள் ரெயில்களை இயக்க முடியாது.

எனவே முதல்-அமைச்சரும், தலைமை செயலாளரும் இந்த ரெயில்களை இயக்குமாறு தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டங்களின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் அடுத்த மாதம் வழங்க வேண்டிய தளர்வுகள் குறித்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலன் கருதி இந்த 4 பயணிகள் ரெயிலையும் விரைவில் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News