செய்திகள்
பிரேமலதா

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற தே.மு.தி.க. திட்டமா? -நாளை மறுநாள் பிரேமலதா முக்கிய ஆலோசனை

Published On 2021-01-28 09:10 GMT   |   Update On 2021-01-28 09:10 GMT
அ.தி.மு.க. கூட்டணியில் தாங்கள் விரும்பும் அளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேற தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க. கூடுதல் இடங்களை கேட்கிறது.

இதுதொடர்பாக நேற்று பேட்டி அளித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கடந்த 2011-ம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் தே.மு.தி.க. வுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன என்றும் நடைபெற உள்ள தேர்தலிலும் அது போன்ற இடங்களை எதிர் பார்ப்பதாகவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கூட்டணி பேச்சு வார்த்தையை உடனடியாக அ.தி.மு.க. தொடங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை தே.மு.தி.க. விடுத்துள்ள நிர்பந்தமாகவே அ.தி.மு.க. நிர்வாகிகள் கருதுகிறார்கள்.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை காலம் முடிந்து பெங்களூர் சிறையில் இருந்து நேற்று விடுதலையான சசிகலாவுக்கு பிரேமலதா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். சசிகலாவால் பயன் அடைந்தவர்களே இன்று அவரை எதிர்ப்பது வேதனை அளிப்பதாக கூறியிருக்கும் பிரேமலதா தீவிர அரசியலில் சசிகலா ஈடுபட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

சசிகலாவை எந்த சூழ் நிலையிலும் அ.தி.மு.க.வில் சேர்ப்பதில்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து விட்டார். அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளும் சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ப்பதில்லை என்கிற முடிவில் உறுதியாக உள்ளனர்.

இந்தநிலையில் பிரேமலதா தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவான நிலைபாட்டை விடுத்து தினமும் பேட்டி அளிப்பது, அ.தி.மு.க. நிர்வாகிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது.

இந்தநிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பற்றியும் பிரேமலதா கருத்து தெரிவித்து இருந்தார். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், கட்சியினரே அவரை முதல்-அமைச்சராக தேர்வு செய்தனர் என்றும் கூறியிருக்கிறார்.

பிரேமலதாவின் இந்த கருத்து அ.தி.மு.க.வினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதுடன் சர்ச்சைக்குரிய வகையிலும் அமைந்துள்ளது.

இப்படி கூட்டணி குறித்தும், சசிகலாவின் அரசியல் வருகை குறித்தும் பல்வேறு கருத்துக்களை கூறி வரும் பிரேமலதா தேவை பட்டால் தே.மு.தி.க. தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளது என்று பலமுறை கூறியிருக்கிறார்.

அ.தி.மு.க. கூட்டணியில் தாங்கள் விரும்பும் அளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேற தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் கூட்டணி மற்றும் கட்சி பணிகள் பற்றி விவாதிப்பதற்காக நாளை மறுநாள் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் விஜயகாந்த், பிரேமலதா இருவரும் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா? தனித்து போட்டியிடுவதா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது. இருப்பினும் இறுதி முடிவு இந்த கூட்டத்தில் எடுக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கட்சி நிர்வாகிகள் சிலர் கூறினார்கள்.

இந்த கூட்டத்துக்கு பிறகு அடுத்தடுத்து மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டமும் நடைபெறுகிறது. இதையடுத்து நடக்க உள்ள தே.மு.தி.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தேர்தல் நிலைபாட்டை விஜயகாந்த் அறிவிக்க உள்ளார்.

அ.தி.மு.க. கூட்டணியில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் வெளிப்படையாக தொடங்கப்படவில்லை. அதற்குள் தே.மு.தி.க.வுக்கு எத்தனை இடங்கள் வேண்டும் என்கிற விவரத்தை வெளிப்படையாகவே தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News