செய்திகள்
குஷ்பு

தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் தகுதி யாருக்கும் கிடையாது- குஷ்பு

Published On 2021-01-28 08:50 GMT   |   Update On 2021-01-28 08:50 GMT
அரசியல் பண்பாடு என்பது அரசியல் ரீதியாக இருக்க வேண்டும். அது தனிப்பட்ட தாக்குதலாக தரம் தாழ்ந்துவிட கூடாது என்று குஷ்பு கூறினார்.
சென்னை:

அரசியலில் ஆரோக்கியமான விமர்சனங்கள் மக்களால் ரசிக்கப்படும். அதுவே தரம் தாழ்ந்து போகும் போது சர்ச்சையை ஏற்படுத்தும்.

சமீபத்தில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தி, நாக்பூர் டவுசர் வாலாக்களால் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது என்று விமர்சித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜனதா தகவல் தொழில் நுட்ப பிரிவை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் சோனியாவை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு விமர்சித்தார்.

இது காங்கிரசார் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நிர்மல்குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹசீனா சையத் தலைமையில் மகளிர் காங்கிரசார் மதுரவாயலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த நிலையில் சொந்த கட்சியாக இருந்தாலும் நிர்மல்குமாரின் விமர்சனத்தை குஷ்பு கண்டித்தார். ‘பெண்களை தரம் தாழ்ந்த வார்த்தைகள் மூலம் விமர்சிக்கும் போக்கு சரியானதல்ல’ என்றார்.

அதற்கு நிர்மல்குமார் அளித்த பதிலில் தனது விமர்சனம் தரம் தாழ்ந்தவை அல்ல என்றார். சொந்த கட்சிக்குள்ளேயே எழுந்துள்ள இந்த பிரச்சினை கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குஷ்புவை பொறுத்தவரை தனது கருத்துக்களை வெளிப்படையாக தைரியமாக சொல்பவர். அந்த வகையில் இப்போதும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

நான் எனது கருத்தை தெரிவித்தேன். பதிலுக்கு பதில் என்ற ரீதியில் பதில் சொல்ல தேவையில்லை.

என்னை பொறுத்தவரை தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை ஏற்க முடியாது. அந்த தகுதியும் கட்சி நிர்வாகிகளுக்கு கிடையாது.

கட்சி, கொள்கை ரீதியாக விமர்சிக்க வேண்டும். தனிப்பட்ட விமர்சனம் எனக்கு பிடிக்காதது. அரசியலில் அதை நான் கடைப்பிடிப்பவள்.

காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளில் இருந்தபோதும் இந்த மாதிரி தவறுகளை கண்டிக்க நான் தயங்கியது இல்லை. நான் காங்கிரசில் இருந்தபோது, ‘பிரதமர் மோடியின் தனிப்பட்ட விசயங்களை விமர்சித்தபோதும் கண்டித்து இருக்கிறேன்.

தமிழிசை தமிழக பா.ஜனதா தலைவராக இருந்தபோது கட்சி ரீதியாக நான் அவரை விமர்சித்தவள். ஆனாலும் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததை நான் கண்டித்து இருக்கிறேன்.

அரசியல் பண்பாடு என்பது அரசியல் ரீதியாக இருக்க வேண்டும். அது தனிப்பட்ட தாக்குதலாக தரம் தாழ்ந்துவிட கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News