செய்திகள்
ஜெயலலிதா முழு உருவச்சிலை

சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்

Published On 2021-01-28 06:20 GMT   |   Update On 2021-01-28 06:20 GMT
சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை:

தமிழக முதலமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகவும் இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்' பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்துவைத்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இந்தநிலையில் பெண் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்ததற்காகவும், பெண் கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டுவந்ததற்காகவும் சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு ‘ஜெயலலிதா வளாகம்' என்று பெயர் சூட்டப்படும் என்றும், உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்றும் சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலையை அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. சிலை நிறுவுவதற்கான பீடம் அமைக்கப்பட்ட நிலையில், மின்விளக்குகளால் சிலை ஒளிரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று ஜெயலலிதாவின் வேதா இல்லம் திறந்து வைக்கப்பட்ட பிறகு, சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் 9 அடி உயர முழு உருவ சிலை திறக்கப்பட்டது.

லேடி வெலிங்டன் கல்லூரியில் பெயர் மாற்றப்பட்ட ஜெயலலிதா வளாகத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். உயர்கல்வி மன்ற வளாகத்துக்கு ஜெயலலிதா பெயர் சூட்டி திறக்கப்பட்டது.

மெரினாவில் ஜெயலலிதா சிலை திறப்பில் நடிகர் அஜித் உதவியுடன் வடிவமைத்த ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டது.

ஜெயலலிதா சிலை மீது போர்த்தப்பட்டிருந்து பச்சை நிற போர்வையை ட்ரோன் மூலம் அகற்றி முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அண்ணா பல்கலை. மாணவர்களின் ட்ரோன் மூலம் ஜெயலலிதா சிலை மீது மலரும் தூவப்பட்டது.


Tags:    

Similar News