செய்திகள்
ஜெயலலிதா நினைவிடம்

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள்

Published On 2021-01-27 08:29 GMT   |   Update On 2021-01-27 08:29 GMT
ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் இன்று திறந்து வைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள்.

இவ்வளாகத்தில் அம்மா நினைவு மண்டபம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, காலணி பாதுகாப்பு இடம், சேவை கட்டிடங்கள் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மெருகேற்றிய கருங்கல் நடைபாதை வசதி, நீர் தடாகங்கள், புல்வெளி போன்ற வசதிகளோடு வளாகமானது புதிய வடிவமைப்புகளோடு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவு மண்டபமானது பீனிக்ஸ் பறவையின் சாயலுக்கு ஒப்பாக அதன் செயலுக்கு ஏற்ப அதாவது “எத்தனை முறை வீழ்ந்தேனோ அத்தனை முறையும் எழுவேன்” என்ற ஜெயலலிதாவின் சூளுரைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு மண்டபத்தின் தொழில்நுட்ப வடிவமைப்பானது இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் மற்ற பகுதிகள் தட்பவெப்ப மற்றும் உப்பு காற்றினால் பாதுகாக்கும் வண்ணம் கான்கிரீட் மேற்பரப்புகளின் மீது பாலியுரத்தின் பூச்சு பூசப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகமானது சுமார் 8 ஆயிரத்து 555 சதுர அடி பரப்பளவில் சிறந்த கட்டிட வடிவமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டு சுவர்களில் உயர்தர பளிங்கு கற்களும் மற்றும் தரை பகுதியில், உயர்தர கருங்கல்லும் பதிக்கப்பட்டுள்ளது. மேற்கூரையானது வளைவுகளுடனும் மற்றும் சில இடங்களில் கண்ணாடியிலான கூரைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள் காணத்தக்கதாக பல்வேறு வகை மெழுகு சிலைகள் மற்றும் புகைப்பட அமைப்புகள் அமையப் பெற்றுள்ளது.

இவ்வளாகத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் நான்கு இடங்களில் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக உயர்தர கருங்கல்லால் ஆன நடைபாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வளாகத்தில் இரு பக்கவாட்டிலும் 110 அடி நீளத்திற்கு மேற்கூரையுடன் கூடிய நடைபாதையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை கூரைகளின் மீது சூரிய ஒளி சேமிப்பு தகடுகள் பதிக்கப்பட்டு அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது நினைவிட வளாகத்தின் மின் தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வளாகத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் பல்வேறு வகை தோட்ட அமைப்புகள் நீர் தடாகங்கள் சிறந்த தோட்ட கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. நீர் தடாகங்களின் உள்பகுதிகளில் கருங்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் நினைவிடத்தின் தன்மைக்கு ஏற்ப ராஜமுந்திரியில் இருந்து சிறந்த செடிகள் மரங்கள் தோட்ட கலை, நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தோட்ட கலை வல்லுநர்களின் ஆலோசனைகளின்படி பல்வகை நாட்டு மரங்களை கொண்டு மியாவாக்கி தோட்டம் பீனிக்ஸ் அமைப்பின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது.

நினைவிட பராமரிப்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள ஏதுவாக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் (சிவில் மற்றும் மின்) மற்றும் சேவை கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதர அமைப்புகள் நுழைவு வாயில் நீர் தடாகத்தின் அருகில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் வெண்கலைச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வளாகத்திலுள்ள வடக்கு பகுதியில் பழுதடைந்த சுற்றுச்சுவரை மாற்றி புதிதாக சுற்றுச்சுவர் சுமார் 5 அடி முதல் 8 அடி வரை உயரத்திலும் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக கான்கிரீட் சாலை 265 மீட்டர் நீளத்தில் 9 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அம்மா நினைவு மண்டபத்தின் இரு புற நுழைவு பகுதியில் ஆண் சிங்க வடிவில் கருங்கல்லால் ஆன சிலைகள் மற்றும் அதை தாங்கும் பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிட வளாகத்தில் மின்சார வசதி மின் விளக்குகள் கண்காணிப்பு கேமரா வசதி, பொது ஒலி அமைப்பு வசதி அம்மா நினைவு மண்டபத்தில் அணையா விளக்கு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வளாகத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் நிறுத்த ஏதுவாக இரு இடங்களில் வாகனம் நிறுத்தும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News