செய்திகள்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட காட்சி.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் வாகன பேரணி

Published On 2021-01-26 20:54 GMT   |   Update On 2021-01-26 20:54 GMT
விவசாயிகளுக்குஎதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் வாகன பேரணி நடைபெற்றது.

திருப்பூர்:

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று மாநகர் பகுதியில் பாளையக்காடு, கோவில்வழி, காந்திநகர் ஆகிய 3 பகுதிகளில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணி மாநகராட்சி அருகே உள்ள காந்தி சிலை முன்பு முடிவடைந்தது. இதன் பின்னர் குடியரசு தினத்தையொட்டி மாநகராட்சி எதிரே தேசியக்கொடியேற்று விழா மற்றும் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்கு ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் சிவசாமி தலைமை தாங்கி பேசினார். சுப்பராயன் எம்.பி. தேசியக்கொடியேற்றி வைத்து பேசினார். தொடர்ந்து அனைவரும் தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துகண்ணன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்வராஜ், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார்,காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மற்றும் எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., கொங்கு மக்கள் தேசிய கட்சி விவசாய அணி, எம்.எல்.எப். உள்படபல்வேறு கட்சிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருப்பூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்புகள் நேற்று காலை கோவில்வழி அருகே இருந்து 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தேசியக்கொடியுடன் பேரணி சென்றனர். பேரணியானது கோவில் வழியில் இருந்து தாராபுரம் ரோடு வழியாக மாநகராட்சியை அடைந்தது.

அதே போன்று பாளையக்காடு, காந்தி நகர், காங்கேயம் ரோடு, சி.டி.சி. கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேசிய கொடியுடன் பேரணி சென்றனர். தேசிய கொடியேற்றிவைத்து மாநகராட்சி எதிரில் போராட்டத்தில ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து விவசாயிகள்10-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் பேரணியாக போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தனர். அவர்களை கோவில்வழி அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மத்திய அரசின் வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி டெல்லியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று அவினாசி அருகே ஆட்டையாம்பாளையத்தில் தேசிய கொடியேற்றப்பட்டு அங்கிருந்து இருசக்கர வாகன பேரணி தொடங்கியது. இதில் காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அவினாசி சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் 250-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்குளியில் நேற்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, அனைத்து தொழிற்சங்கங்கள், அனைத்து கட்சிகள் சார்பில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வு, இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார் தலைமை தாங்கினார்.

முன்னதாக டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்து, விவசாயிகள் கொண்டு வந்திருந்த டிராக்டர்களை திருப்பி அனுப்பினர். பின்னர் இருசக்கர வாகன பேரணி தொடங்கி ஊத்துக்குளி ஈஸ்வரன் கோவில் மைதானத்தை அடைந்தது.

பல்லடத்தில் தி.மு.க.முன்னாள் அமைச்சரும், தி.மு.க. திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமானமு.பெ.சாமிநாதன் தலைமையில் விவசாயிகள் பேரணி நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தி.மு.க.கூட்டணி கட்சியினர் மற்றும் விவசாயிகள் தேசியக்கொடியுடன் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துகொண்டஉழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
Tags:    

Similar News