செய்திகள்
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

அனைவரும் வாக்களிக்க வேண்டும்- கலெக்டர் சிவன்அருள் பேச்சு

Published On 2021-01-26 12:00 GMT   |   Update On 2021-01-26 12:00 GMT
அடையாள அட்டை இருந்தால் மட்டும்போதாது, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கலெக்டர் சிவன்அருள் பேசினார்.
திருப்பத்தூர்:

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சாரண சாரணீய மாணவர்கள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பஸ் நிலையம் வழியாக தூய நெஞ்சக் கல்லூரியை சென்றடைந்தது. அதைத்தொடர்ந்து அங்கு தேசிய வாக்காளர் தின உறுதி மொழி கலெக்டர் தலைமையில் எடுத்து கொள்ளப்பட்டது. மேலும் புதிய வாக்காளர்களுக்கு தேர்தல் அடையாள அட்டையும், சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு நற்சான்றுகளை கலெக்டர் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

100 சதவீதம் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதுதான் நமது இலக்கு. நாம் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு என்று தேர்தலில் தனி இடம் உண்டு. நமக்கு நல்லது செய்யக்கூடியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். நம்மை யார் ஆண்டால் நல்லது நடக்கும் என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும், அப்போதுதான் நல்ல தலைவர்கள் உருவாகுவார்கள். நமது நாட்டை கண்ணை போன்று காப்பாற்ற இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியிலில் பெயர் இருந்தால் மட்டும் போதாது அனைவரும் வாக்களிக்க முன்வரவேண்டும்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், உதவி கலெக்டர் வந்தனாகர்க், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், தேர்தல் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News