செய்திகள்
ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நள்ளிரவு வரை நீடித்த பத்திரப்பதிவு

ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நள்ளிரவு வரை நீடித்த பத்திரப்பதிவால் பரபரப்பு

Published On 2021-01-26 08:47 GMT   |   Update On 2021-01-26 08:47 GMT
ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நள்ளிரவு வரை நீடித்த பத்திரப்பதிவால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்:

ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஓமலூர், காடையாம்பட்டி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பத்திரப்பதிவு செய்யவும், திருமணம், சங்கங்கள் பதிவு செய்யவும் வந்து செல்கிறார்கள். இதனால் அங்கு எப்போதும் கூட்டம் அலைமோதும். இங்கு ஒரு நாளைக்கு 70 முதல் 80 பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இதற்காக ஒரு நாளைக்கு 100 பேருக்கு ேடாக்கன் வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று சார்பதிவாளர் பாலசந்தர் மட்டுமே பத்திரப்பதிவு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 200 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடந்ததாக தெரிகிறது. நேற்று முகூர்த்தநாள் என்பதால் ஏராளமானவர்கள் குவிந்து இருந்தனர். இதன் காரணமாக இரவு 8 மணி வரை 70 பேருக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவு வரை பத்திரப்பதிவு நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது. கொரோனா பேரிடர் காலத்தில் அதிகமானவர்கள் சமூக இடைவெளியின்றி அலுவலகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கூடியிருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News