செய்திகள்
கோப்புபடம்

திண்டுக்கல் அருகே ஆசிரியர்கள் ஏலச்சீட்டு நடத்தி ரூ.47 லட்சம் மோசடி - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்

Published On 2021-01-26 05:06 GMT   |   Update On 2021-01-26 05:06 GMT
திண்டுக்கல் அருகே, ஆசிரியர்கள் ஏலச்சீட்டு நடத்தி ரூ.47 லட்சம் வரை மோசடி செய்தனர் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.
திண்டுக்கல்:

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் புகார் கொடுக்க வருபவர்களுக்காக கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் பெட்டி வைக்கப்பட்டது. அதில் பொதுமக்கள் தங்களின் மனுக்களை போட்டுச்சென்றனர். இந்த நிலையில் திண்டுக்கல்லை அடுத்த பஞ்சம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் புகார் பெட்டியில் ஒரு மனு போடப்பட்டது.

அந்த மனுவில், கடந்த பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வரும் ஆசிரியர்களிடம் எங்கள் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர். அந்த வகையில் ரூ.47 லட்சம் வரை அவர்கள் செலுத்தினர். இந்த நிலையில் ஏலம் எடுத்தவர்களுக்கு பணத்தை கொடுக்காமல் ஆசிரியர்கள் மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல் ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் அருகே சூரியன்குளத்தை சேர்ந்த பொதுமக்கள் புகார் பெட்டியில் போட்டுச்சென்ற மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் பாம்பு கடித்து இறந்துவிட்டார். அவரை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு தேவரப்பன்பட்டி பிரிவு வழியாக எங்கள் பகுதிக்கு கொண்டு சென்ற போது சிலர் வழிமறித்து உடலை கொண்டு செல்ல விடாமல் தடுத்து தகராறு செய்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் சமரசம் செய்ததும் உடலை கொண்டு செல்ல அனுமதித்தனர்.

ஆனால் அதன் பிறகு அந்த வழியாக சென்ற இறந்தவரின் உறவினர்களை சிலர் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் புகார் பெட்டியில் ஒரு மனுவை போட்டுச்சென்றனர். அந்த மனுவில், ஜி.எஸ்.டி. வரி விகிதம் தொடர்பாக வணிகர்களுடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த வேண்டும். திண்டுக்கல் பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் உள்ள கடைகளை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வணிகர்களின் குடும்பத்தினருக்கு வணிகர் நலவாரியத்தில் இருந்து ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க மாநில அரசுக்கு கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. திண்டுக்கல்லை சேர்ந்த பிளஸ்-2 மாணவ-மாணவிகள் இலவச மடிக்கணினி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Tags:    

Similar News