செய்திகள்
தமிழக அரசு

குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டத்துக்கு அனுமதி இல்லை - தமிழக அரசு

Published On 2021-01-26 01:08 GMT   |   Update On 2021-01-26 01:08 GMT
கொரோனா பெருந்தொற்று பரவல் சூழலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்களை இன்று நடத்தவேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

ஜனவரி 26-ம் தேதி (குடியரசு தினம்), மே 1-ம் தேதி (உழைப்பாளர் தினம்), ஆகஸ்டு 15-ம் தேதி (சுதந்திர தினம்) மற்றும் அக்டோபர் 2-ம் தேதி (காந்தி ஜெயந்தி) ஆகிய 4 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். 
உள்ளாட்சி பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

72-வது குடியரசு தினமான (இன்று) தமிழகத்தில் உள்ள கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாநிலத்தில் நிலவும் கொரோனா பெருந்தொற்று பரவல் சூழலை கருத்தில் கொண்டு, கிராம சபை கூட்டங்களை 26-ந் தேதி (இன்று) நடத்தவேண்டாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அரசிடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை கிராம சபை கூட்டங்களை, கிராம பஞ்சாயத்துகள் கூட்டவேண்டாம் என்று தகுந்த உத்தரவுகளை மாவட்ட கலெக்டர்கள் பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தன்று நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டங்களை ரத்து செய்திருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News