வடலூர் ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் நாளை மறுநாள்(புதன்கிழமை) தொடங்குகிறது.
சிகர விழாவாக 28-ந்தேதி(வியாழக்கிழமை) தைப்பூச விழாவையொட்டி காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி மற்றும் மறுநாள் 29-ந்தேதி காலை 5.30 மணி ஆக 6 காலம், 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
இதையடுத்து வருகிற 30-ந்தேதி மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறைதரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.
கொரோனா வழிகாட்டுதலின்பேரில் தைப்பூச திருவிழாவையொட்டி சன்மார்க்க சங்கங்கள் சார்பில் நடைபெறும் சொற்பொழிவு, இசைநிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க ஏதுவாக இந்தாண்டு கடைகள், நடன நாட்டிய அரங்குகள், ராட்டினம் உள்ளிட்டவைகள் வைக்க தடைசெய்யப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு ஞானசபை வளாகத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வ நிலையத்தின் செயல் அலுவலர் சரவணன் மற்றும் பார்வதிபுரம் கிராம மக்கள் செய்து வருகிறார்கள்.