செய்திகள்
தேமுதிக

அ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு

Published On 2021-01-25 08:18 GMT   |   Update On 2021-01-25 08:18 GMT
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக 40 தொகுதிகளை கேட்டு வருகிறது. அவர்கள் கொடுக்காத பட்சத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கவும் திட்டமிட்டுள்ளது.

சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க. கடந்த சில நாட்களாக தேர்தல் கூட்டணி பற்றியும், சசிகலா வருகை தொடர்பாகவும் காரசாரமான கருத்துக்களை கூறி வருகிறது.

சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே எனது விருப்பம். இன்று சசிகலாவால் அ.தி.மு.க.வில் நல்ல நிலையில் இருப்பவர்கள் எல்லாம் அவரை ஏற்றுக் கொள்ள மறுப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கூறி இருந்தார்.

இந்தநிலையில் மதுரையில் நேற்று பேட்டி அளித்த அவர், அ.தி.மு.க. கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பது பற்றி விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தே.மு.தி.க. 234 தொகுதிகளில்போட்டியிட தயாராக இருப்பதாகவும் பிரேமலதா ஆவேசமாக கூறி இருந்தார்.

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் கணிசமான வெற்றியை பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்தார்.

கடந்த தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக மக்கள் நல கூட்டணியில் முன்னிறுத்தப்பட்டார். 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிட்டது.

இந்த தேர்தலிலும் ஜெயலலிதா ஒதுக்கியது போன்று 41 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தே.மு.தி.க. கேட்டு வருகிறது. ஆனால், அ.தி.மு.க. தரப்பில் இருந்து 15 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தே.மு.தி.க.வுக்கு அதிருப்தி ஏற்படுத்தி உள்ள நிலையில் 41 தொகுதிகளை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சி அடம்பிடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


அ.தி.மு.க. கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்காத பட்சத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கவும் தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளது.

அதேநேரத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து 3-வது அணியை அமைக்கலாமா என்ற எண்ணத்துடன் தே.மு.தி.க. இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தே.மு.தி.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு பிப்ரவரி முதல் வாரத்தில் கூடுகிறது. அதற்குள் கூட்டணியை இறுதி செய்து பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் அந்த கட்சி காய் நகர்த்தி வருகிறது.

இதன் காரணமாகவே பிரேமலதா அ.தி.மு.க. கூட்டணியில் யாருக்கு எத்தனை இடங்கள் என்ற பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News