செய்திகள்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சென்னையில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- தூத்துக்குடியில் இருந்து 2500 பேர் பங்கேற்பு

Published On 2021-01-25 05:03 GMT   |   Update On 2021-01-25 05:12 GMT
சென்னையில் நடைபெறும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 500 பேர் பங்கேற்க உள்ளோம் என்று எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
தூத்துக்குடி:

சென்னையில் வருகிற 27-ந் தேதி நடைபெறும் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புவிழாவில் கலந்து கொள்வது தொடர்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், துணை செயலாளர் சந்தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேசும் போது, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் சென்னை மெரீனா நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் உலக தரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் மிகப்பிரமாண்டமான நினைவிடம் கட்டப்பட்டு உள்ளது. அதனை வருகிற 27-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

பீனிக்ஸ் பறவை வடிவில் வடிவமைக்கப்பட்டு உள்ள அந்த நினைவிடத்தை பார்வையிட்டு வழிபடவும், திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கவும் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அழைப்பை ஏற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 2 ஆயிரத்து 500 பேர் பங்கேற்க தயாராக உள்ளோம். சென்னையில் எழுச்சியோடு கூடும் இந்த கூட்டத்தின் மூலம் வருகிற சட்டமன்ற தேர்தலின் அ.தி.மு.க. வெற்றி செய்தியை உணர்த்த வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆறுமுகநேரி கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வக்கீல் செல்வக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News