செய்திகள்
பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நடைபெற்ற போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

நாளை குடியரசு தின விழா- நெல்லையில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்

Published On 2021-01-25 04:43 GMT   |   Update On 2021-01-25 04:43 GMT
நெல்லை மாவட்டத்தில் நாளை குடியரசு தின விழா நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெறுகிறது.

இதில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். மேலும் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இதையொட்டி நடைபெறும் போலீசாரின் அணிவகுப்புக்காக கடந்த 3 நாட்களாக ஒத்திகை நடத்தி வருகின்றனர். நேற்று போலீசார் துப்பாக்கியுடன் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். இந்த ஆண்டு கொரோனா பரவலையொட்டி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

குடியரசு தின விழா மைதானத்தில் போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி உள்ளனர். விழாவில் பங்கேற்போரை தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிக்க உள்ளனர். எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுதவிர மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள், மத்திய, மாநில நிறுவனங்கள், ரெயில் நிலையங்கள், ரெயில்வே பாலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News