செய்திகள்
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர்பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்ட காட்சி

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் 2-ம் கட்டமாக ஆய்வு

Published On 2021-01-24 14:02 GMT   |   Update On 2021-01-24 14:02 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் 2-ம் கட்டமாக ஆய்வு செய்தனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 'நிவர்' புயல் காரணமாக பெய்த பலத்த மழையினால் 646 ஹெக்டேர் நெல் பயிரும், 868 ஹெக்டேர் உளுந்து பயிர்களும், 35 ஹெக்டேர் மணிலாவும், 77.6 ஹெக்டேர் கரும்பும் ஆக மொத்தம் 1, 626.6 ஹெக்டேர் அளவிலான வேளாண் பயிர்கள் சேதம் அடைந்தன.

இதேபோல் தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி, பப்பாளி, தர்பூசணி, கத்தரி, வெண்டை, மிளகாய், பாகற்காய், புடலங்காய் மற்றும் பூ வகைகளான சாமந்தி, கோழிக்கொண்டை, சம்பங்கி என 323.83 ஹெக்டேர் பயிர்களும் சேதமடைந்தன. இதுதவிர 1, 024 வீடுகள் சேதமடைந்தன. மழையினால் சேதமடைந்தபயிர்களை கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 2-ம் கட்டமாக மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூடுதல் செயலாளர் டாக்டர் திருப்புகழ், இணை ஆலோசகர் டாக்டர் பவன்குமார்சிங் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று காலை கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் ஆய்வுப்பணியை தொடங்கினர். அங்குள்ள விவசாய நிலத்தில் நிவர் புயலால் சேதமடைந்த வாழை மரங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர், சொரப்பூர் ஊராட்சியில் விவசாய நிலத்தில் சேதமடைந்த நெற் பயிர்களையும் பார்வையிட்டு உரிய இழப்பீட்டு தொகை கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினர். பின்னர் வீராணம் ஊராட்சியில் சேதமடைந்த மலட்டாறு ஆற்றங்கரையினையும் மற்றும் விழுப்புரம் தாமரைக்குளம் பகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளையும் பார்வையிட்டனர். ஆய்வின்போது கலெக்டர் ஆ.அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, உதவி கலெக்டர் ரூபினா, கோட்டாட்சியர் ராஜேந்திரன் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நிவர் புயல் பாதிப்புகள் குறித்த புகைப்படங்கள் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். அதன் பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை கலந்துகொண்டு, நிவர் புயல் காரணமாக மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
Tags:    

Similar News