செய்திகள்
கோப்பு படம்

வாணியம்பாடி அருகே வாலிபர் பிணத்துடன் மனைவி போராட்டம்

Published On 2021-01-24 09:37 GMT   |   Update On 2021-01-24 09:37 GMT
வாணியம்பாடி அருகே கொடுத்த கடனை திரும்ப கொடுக்காததால் விரக்தி அடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவரது பிணத்துடன் மனைவி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூர் ஊராட்சியை சேர்ந்தவர் ராம்குமார் (30). இவரது மனைவி ஜெயலட்சுமி (26). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் வாணியம்பாடி புத்துக்கோவில் பகுதியை சேர்ந்த 2 பேருக்கு ராம்குமார் ரூ.7 லட்சம் கடன் கொடுத்திருந்தாராம். தொடர்ந்து கொடுத்த கடனை பல ஆண்டுகளாக திரும்பிக் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமலும், வட்டி செலுத்தாமலும் இழுபறி செய்ததாக கூறப்படுகிறது.

கொடுத்த கடனை வசூலிக்க முடியாத விரக்தியில், ராம்குமார் கடிதம் ஏழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அப்போது போலீசார், நீங்கள் வசிக்கும் பகுதி ஆந்திராவில் உள்ளது. அதனால் புகாரை வாங்க முடியாது எனக்கூறி அலைக்கழித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழக அரசால் வழங்கப்பட்டிருக்கும் பசுமை வீடு திட்டத்தின் கீழ் ராம்குமார் வீடு கட்டியுள்ளார். முறையாக புல்லூர் ஊராட்சியில் அதற்குண்டான வரியும் செலுத்தியுள்ளார். அதற்கான ஆதாரங்களை காட்டியும் போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் ராம்குமாரின் மனைவி தனது கணவரின் சாவுக்கு நியாயம் கிடைக்கவேண்டும். அவர் கொடுத்த கடனை திருப்பி வசூலித்து தரவேண்டும் எனக்கூறி வீட்டின் முன் பிணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென அங்கு வந்த ஆந்திர மாநிலம் குப்பம் போலீசார் நீங்கள் வசிப்பது எங்கள் எல்லையை சேர்ந்த இடத்தில் தான் உள்ளது என்று ராம்குமாரின் பிணத்தை குப்பத்திற்கு எடுத்து சென்றனர்.

பின்னர் அங்கு வந்த இரு மாநில வருவாய்த்துறை அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்து தமிழகத்தை சேர்ந்த இடம் என்பதால், வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக பிணத்தை அனுப்பி வைத்தனர்.

இது குறித்து திம்மாம் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநில எல்லையை தீர்மானிப்பதில் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ஏற்பட்ட குழப்பத்தால், வாலிபர் உடல் இரு மாநிலங்களுக்கும் மாறி மாறி கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News