செய்திகள்
கோப்புபடம்

தேவதானப்பட்டி அருகே தொழிலாளி எரித்துக்கொலை

Published On 2021-01-23 12:54 GMT   |   Update On 2021-01-23 12:54 GMT
தேவதானப்பட்டி அருகே பிணமாக கிடந்தவர் விருவீட்டை சேர்ந்த தொழிலாளி என்றும், எரித்து கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் இருந்து வைகைபுதூர் செல்லும் சாலையில், பாலூத்து என்ற இடத்திற்கு அருகில் புதருக்குள் நேற்று முன்தினம் ஒரு ஆண் பிணம் எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஜெயமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி நேரில் வந்து விசாரணை நடத்தினார்.அந்த ஆணின் உடலின் பெரும் பகுதி எரிந்து இருந்தது. முகமும் எரிந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்த நபர் கொலை செய்யப்பட்டு, உடல் எரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திண்டுக்கல் மாவட்டம் விருவீடு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் ஆனந்தராஜ் (வயது 29) என்பவரை காணவில்லை என்று கடந்த 15-ந்தேதி விருவீடு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விருவீடு போலீஸ் நிலையத்துக்கு ஜெயமங்கலம் போலீசார் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், பால்ராஜை விருவீடு போலீசார் அழைத்துக் கொண்டு நேற்று தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த உடலை பால்ராஜ் பார்த்து அது தனது மகன் தான் என அடையாளம் காட்டினார். மேலும் ஆனந்தராஜ் விருவீட்டில் கூலி வேலை பார்த்து வந்ததாகவும் கூறினார்.

காணாமல் போன ஆனந்தராஜ் ஜெயமங்கலம் பகுதிக்கு ஏன் வந்தார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே இந்த கொலை குறித்து துப்பு துலக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில், பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மேற்பார்வையில் பெரியகுளம் இன்ஸ்பெக்டர் சுரேஷ், தென்கரை இன்ஸ்பெக்டர் சுகுமாறன், ஆண்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணதேவேந்திரன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "கொலை செய்யப்பட்ட ஆனந்தராஜ், வடுகபட்டியை சேர்ந்த ஒரு நபரை பார்க்க வந்த இடத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம். கொலையாளிகள் சிக்கினால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும்" என்று தெரிவித்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News