செய்திகள்
வேதா இல்லம்

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் 32 ஆயிரம் பொருட்களை பார்க்கலாம்

Published On 2021-01-23 08:37 GMT   |   Update On 2021-01-23 08:37 GMT
சென்னை போயஸ்கார்டனில் 10 கிரவுண்டு பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
சென்னை:

சென்னை போயஸ்கார்டனில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லம்’ வீடு நினைவு இல்லமாக மாற்றப்படுகிறது.

இந்த வேதா இல்லம் பொது மக்கள் பார்வைக்காக வருகிற 28-ந்தேதி திறக்கப்பட உள்ளது. வேதா இல்லத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கிறார்.

10 கிரவுண்டு பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ள இந்த இல்லத்தில் நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும்.
4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடை கொண்ட 867 வெள்ளிப் பொருட்களும், வெள்ளி பாத்திரங்களும் இடம் பெற்றுள்ளன.

இதை பராமரிக்க முதல்- அமைச்சர் தலைமையில் ஒரு அறக்கட்டளை அமைக்கும் சட்டத்தை தமிழக அரசு ஏற்கனவே நிறைவேற்றியது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து இந்த சொத்துக்கள் தகவல் தொடர்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தகவல் தொடர்பு துறையும், பொதுப்பணித்துறையும் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை இங்கு காட்சிப்படுத்தி வருகிறார்கள். இதற்காக இந்த துறைகளின் மூத்த அதிகாரிகள் சமீபத்தில் இங்கு வந்தனர்.

ஒவ்வொரு பொருளும் கண்ணாடி பேனல்களுக்குள் காட்சிப்படுத்தப்படவில்லை. நேரடியாக பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் ஆளுமையை பிரதிபலிக்கும் பொருட்கள், புத்தகங்கள், நினைவு பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் இங்கு காட்சி படுத்தப்பட்டு உள்ளது. இந்த பொருட்களை வருகிற 28-ந் தேதி முதல் பொது மக்கள் பார்க்க அனுமதிக்கும் நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.
Tags:    

Similar News