செய்திகள்
ராமதாஸ்

அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா?

Published On 2021-01-23 01:38 GMT   |   Update On 2021-01-23 01:38 GMT
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக பா.ம.க. முடிவு செய்துள்ளது என்றும், இதுதொடர்பாக 25-ந் தேதி அவசர நிர்வாக குழு கூட்டம் நடக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை:

வன்னியர் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடந்த 40 ஆண்டுகளாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க. வருகிற தேர்தலுக்கு முன்பு 20 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அறிவிப்பை அ.தி.மு.க. வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி 5 கட்டங்களாக போராட்டம் நடத்தி வந்தார்.

அடுத்தகட்ட போராட்டத்தை வருகிற 29-ந் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்கள் அலுவலகங்கள் முன்பும் நடத்த பா.ம.க. முடிவு எடுத்துள்ளது. ஏற்கனவே தனி இடஒதுக்கீடு கேட்டு வந்த டாக்டர் ராமதாஸ், பின்னர் தனி ஒதுக்கீடு தராவிட்டாலும் தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு என உள் ஒதுக்கீடு தந்தாலும், அதை பெறுவதற்கு தயாராக இருந்தார்.

தன்னுடைய இந்த முடிவை தைலாபுரத்தில், தன்னை சந்தித்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் அன்பழகன் ஆகியோரிடமும் தெரிவித்தார். ஆனால் இதுவரை சாதகமான முடிவு வராததால் வருகிற 25-ந் தேதி காலை 11 மணிக்கு பா.ம.க. அவசர நிர்வாக குழு கூட்டம் இணையவழி மூலமாக நடத்தி, அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்து அறிவிக்கப்போவதாக அந்த கட்சியில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News