செய்திகள்
வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங்

விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.510 கோடி செலுத்தப்பட்டது- வேளாண்துறை செயலாளர் தகவல்

Published On 2021-01-22 07:28 GMT   |   Update On 2021-01-22 07:28 GMT
நிவர், புரெவி புயல்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.592 கோடியில் தற்போது வரை ரூ.510 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிவர், புரெவி, ஆகிய இரண்டு புயல்கள் தாக்கின.

இதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டாலும் விவசாய நிலங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை சந்தித்தனர்.

நிவர் புயல் தாக்கியபோது 33 சதவீதத்துக்கு மேல் 12,863 ஹெக்டேர் வேளாண்பயிர்கள், 3,814 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதில், வேளாண் பயிர்களுக்கு ரூ.19.95கோடி, தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ.6.65 கோடி என மொத்தம் ரூ.26.60 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

புரெவி புயலால் 2.64 லட்சம் ஹெக்டேர் வேளாண்பயிர்கள், 15,661 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்கள் பாதித்தது கண்றியப்பட்டது.

இவற்றுக்கு நிவாரணமாக வேளாண் பயிர்களுக்கு ரூ.510.56 கோடி மற்றும்2 ஹெக்டேருக்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.27.59 கோடி என ரூ.538.15 கோடி மற்றும் தோட்டக் கலைப் பயிர்களுக்கான நிவாரணம் ரூ.27.30 கோடி என ரூ.565.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

ஆக மொத்தம் நிவர், புரெவி புயல்களுக்கான நிவாரணமாக ரூ.592 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டுதல்படி சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம், மானாவாரி நெற்பயிர்தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் ஹெக்டேருக்கு ரூ. 10 ஆயிரம், பல்லாண்டுக்கு கால பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதுபற்றி தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

நிவர், புரெவி புயல்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.592 கோடியில் தற்போது வரை ரூ.510 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தொகை தொடர்ந்து வரவு வைக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்ட கணக்கெடுப்பில் ஜனவரி மாத மழை பாதிப்பு 4.5 லட்சம் ஹெக்டேர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து 18 மாவட்டங்களில் தற்போது கணக்கெடுப்பு நடக்கிறது. வரும் 29-ந் தேதிக்குள் பணிகளை முடித்து, அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். அதன்படி விரைவில் நிவாரணம் வழங்கப்படும். இதுதவிர, பயிர் காப்பீட்டுத் தொகையையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News