செய்திகள்
அமைச்சர் கேபி அன்பழகன்

கல்லூரிகளுக்கு மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைக்கலாமா?- உயர்கல்வித்துறை ஆலோசனை

Published On 2021-01-22 02:15 GMT   |   Update On 2021-01-22 02:15 GMT
கல்லூரிகளை திறந்து மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைக்கலாமா? என்பது பற்றி உயர்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
சென்னை:

கொரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் 3-வது வாரத்தில் இருந்து மூடப்பட்டு இருந்த நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம் 2-ந்தேதியும், சில கல்லூரிகளில் 7-ந்தேதியும் தொடங்கின.

மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் கடந்த 19-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதுதவிர மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு எப்போது கல்லூரிகள் திறக்கப்படும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறப்பது பற்றி உயர்கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. மாணவர்கள் எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது, அனைத்து மாணவர்களையும் ஒரே நாளில் கல்லூரிக்கு வரவழைத்தால் அங்கு சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது.

எனவே அதுபற்றி தீவிரமாக யோசித்து வருகிறோம். அதிலும் குறிப்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு நாளும், அதற்கு மறுநாள் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கும் என சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைக்கலாமா? என்றும் பரிசீலித்துள்ளோம். ஆனால் இது முடிவு அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News