செய்திகள்
கோப்புபடம்

தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை

Published On 2021-01-21 14:13 GMT   |   Update On 2021-01-21 14:13 GMT
பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய கோரி தஞ்சையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை ரெயிலடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட தலைவர் வீரமோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பாஸ்கர், ராஜேந்திரன், ராமச்சந்திரன், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், கனமழையை பேரிடராக அறிவித்து வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர்க்கடன்களையும் ரத்து செய்யவேண்டும். மழையால் பாதித்த நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக கணக்கெடுக்க வேண்டும்.

நிலக்கடலை, உளுந்து போன்ற தானிய பயிர்களுக்கும், வாழை, வெற்றிலை போன்ற அனைத்து வகை பயிர்களுக்கும் இழப்பீடு அறிவிக்க வேண்டும். உரியகாலத்தில் இன்சூரன்ஸ் தொகை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் ஏரிகள், குளங்களில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில்,இந்திய கம்யூனிஸ்டு கட்சி வடக்கு மாவட்ட நிர்வாகி தர்மராஜ், மாவட்ட துணை செயலாளர் கல்யாணசுந்தரம், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பூதலூர் ஒன்றிய தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் பூதலூர் தாசில்தாரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அப்போது மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள் கால்நடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உரியஇழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை துணை ்தாசில்தாரிடம் பூதலூர் ஒன்றிய விவசாய சங்க நிர்வாகிகள் வழங்கினர். இதில் பூதலூர் தெற்கு ஒன்றிய விவசாய சங்க செயலாளர் பாஸ்கர், பூதலூர் வடக்கு ஒன்றிய விவசாய சங்க செயலாளர் முருகேசன், நிர்வாகிகள் சம்சுதீன், உதயகுமார், ராஜகோபால், பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News