செய்திகள்
கொரோனா தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் 5 நாட்களில் 1,386 பேருக்கு தடுப்பூசி

Published On 2021-01-21 03:18 GMT   |   Update On 2021-01-21 03:18 GMT
மதுரை மாவட்டத்தில் 5 நாட்களில் 1,386 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 805 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
மதுரை:

தமிகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ந்தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி போடுவதற்காக, தனித்தனி கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 166 மையங்கள் உள்ளன.

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை, திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரி, மேலூர் அரசு ஆஸ்பத்திரி, கள்ளந்திரி தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், சமயநல்லூர் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டு அங்கு தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்று வருகிறது.

முதல் நாளில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுபோல், மற்ற மையங்களில் 90 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில், 92 பேர் டாக்டர்கள், 42 பேர் செவிலியர்கள், 10 பேர் ஆம்புலன்ஸ் ஊழியர்கள், முன்கள தொழில்நுட்ப துறை சார்ந்த ஒருவர், 45 சுகாதார பணியாளர்கள் என மொத்தம் 190 பேருக்கு மதுரையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

2-வது நாளில் 178 பேருக்கும், 3-வது நாளில் 319 பேருக்கும், 4-வது நாளில் 363 பேருக்கும் 5-வது நாளில் 336 பேருக்கும் என மொத்தம் 5 நாட்களில் 1,386 பேருக்கு மதுரையில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் 5 நாட்களில் 805 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2-வதாக திருமங்கலத்தில் 234 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News