செய்திகள்
உண்டியல் காணிக்கை மூலம் 10 நாட்களில் ரூ.1 கோடியே 68 லட்சம் வருவாய்

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் 10 நாட்களில் ரூ.1 கோடியே 68 லட்சம் வருவாய்

Published On 2021-01-21 03:11 GMT   |   Update On 2021-01-21 03:11 GMT
பழனி முருகன் கோவிலுக்கு உண்டியல் காணிக்கை மூலம் 10 நாட்களில் ரூ.1 கோடியே 68 லட்சத்து 73 ஆயிரத்து 450 வருவாய் கிடைத்துள்ளது.
பழனி:

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாகவும், தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த ஆன்மிக தலங்களில் ஒன்றாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் மட்டுமின்றி தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள காணிக்கைகள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 11-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 10 நாட்களுக்கு பிறகு, பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. பழனி முருகன் கோவில் செயல்அலுவலர் கிராந்திகுமார்படி, உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் என 150-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 68 லட்சத்து 73 ஆயிரத்து 450 வருவாய் கிடைத்தது. மேலும் தங்கத்தாலான வேல், மோதிரம், தாலி, காசு என 639 கிராம் பொருட்களும், வெள்ளியாலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் 20 கிலோ 600 கிராமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இதேபோல் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் 43-ஐ பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். மேலும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், கெடிகாரம், பட்டு வேட்டி உள்ளிட்ட பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
Tags:    

Similar News