செய்திகள்
வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு

குமரி மாவட்டத்தில் 15½ லட்சம் வாக்காளர்கள்- புதிதாக 54 ஆயிரம் வாக்காளர்கள் சேர்ப்பு

Published On 2021-01-21 02:32 GMT   |   Update On 2021-01-21 02:32 GMT
குமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 15½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் புதிதாக 54 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வெளியிடப்பட்டது. அப்போது குமரி மாவட்டத்தில் 15 லட்சத்து 20 ஆயிரத்து 935 வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது 6 சட்டசபை தொகுதிகளிலும் 18 வயது பூர்த்தியான ஏராளமான புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தனர். அந்த பெயர்கள் சேர்க்கும் பணி முடிவடைந்தது.

அதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடந்தது. இதில் கலெக்டர் அரவிந்த் கலந்துகொண்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் 16-11-2020 முதல் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்காக 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 64 ஆயிரத்து 936 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பின்னர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், ஒவ்வொரு வீடு-வீடாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது இடம்பெயர்ந்த மற்றும் இரட்டை பதிவுடைய வாக்காளர்களை கண்டறிந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் 6 சட்டசபை தொகுதிகளிலும் புதிதாக 54 ஆயிரத்து 518 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அதைத்தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் 6 சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 15 லட்சத்து 67 ஆயிரத்து 627 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 7 லட்சத்து 82 ஆயிரத்து 936 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 84 ஆயிரத்து 488 பெண் வாக்காளர்களும், 203 மூன்றாம் பாலினத்தவரும் இடம் பெற்று உள்ளனர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வரையறுக்கப்பட்ட மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்களா? என்பதை இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

1-1-2021 அன்று 18 வயது பூர்த்தி செய்யும் நபர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட மையங்களில் உரிய விண்ணப்ப படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆ‌ஷா அஜித், சப்-கலெக்டர் (பத்மநாபபுரம்) சரண்யா அரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராதாகிரு‌‌ஷ்ணன், மாநகர அ.தி.மு.க. பொருளாளர் ஜெயகோபால், தி.மு.க. நிர்வாகி வர்க்கீஸ், தே.மு.தி.க.வை சேர்ந்த செல்வகுமார், பா.ஜனதா நிர்வாகி ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News