செய்திகள்
மாணவ -மாணவிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த மாணவ -மாணவிகள் பூ கொடுத்து வரவேற்ற காட்சி.

மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

Published On 2021-01-21 00:57 GMT   |   Update On 2021-01-21 00:57 GMT
மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் மாணவர்களின் விழித்திரை, கைரேகை பதிவுகள் எடுக்கப்பட்டன.
சென்னை:

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக நீட் தேர்வு சற்று தாமதமாக நடத்தப்பட்டு, மதிப்பெண் வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந ்தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கின்றன.

அதற்கு முன்பு அந்த மாணவர்களுக்கான அடிப்படை வகுப்புகள் தொடங்கப்படுவது வழக்கம். அதன்படி, மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அடிப்படை வகுப்புகள் நேற்று முதல் தொடங்கி இருக்கின்றன.

சென்னை அரசு ஓமந்தூரார், ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இந்த அடிப்படை வகுப்புகள் நேற்று முதல் தொடங்கி இருக்கின்றன. வருகிற 30-ந் தேதி வரை இந்த வகுப்புகள் நடைபெறும்.

இதில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும், மருத்துவ படிப்புகளில் என்ன மாதிரி கற்றுக்கொள்ள போகிறார்கள்?, அவர்களுக்கான பாடத்திட்டங்கள் என்ன?, ‘ராக்கிங்' தொடர்பான அறிவுரைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கே.நாராயணபாபு, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி, துணை முதல்வர் சுகுணா பாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று வகுப்புகளுக்கு வந்த மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளைநிற கோட், ஸ்டெதஸ்கோப், புத்தகங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவர்களை மூத்த மாணவர்கள் ரோஜாப்பூ, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் மருத்துவ கல்லூரிக்கு நேற்று வந்த மாணவர்களின் விழித்திரை மற்றும் கைரேகை ப பதிவுகள் எடுக்கப்பட்டன. அதனை மருத்துவ கல்வி இயக்ககத்திடம் அந்தந்த கல்லூரிகள் வழங்க இருக்கின்றன. மேலும், வகுப்புகளுக்கு வந்திருந்த மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள் குறித்த அறிவுரைகளும் வழங்கப்பட்டன. அதில் மாணவிகள் ‘லெக்கின்ஸ்’ உடையையும், மாணவர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் உடையையும் கண்டிப்பாக அணியக்கூடாது என்று தெரிவித்தனர். நேற்று கல்லூரிகளுக்கு வந்திருந்த மாணவ-மாணவிகள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளை வைத்திருந்தால் மட்டுமே உள்ளே வர அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News