செய்திகள்
அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் ஆய்வு செய்த போது

தமிழகத்துக்கு கூடுதலாக 5 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்தன - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

Published On 2021-01-20 23:22 GMT   |   Update On 2021-01-20 23:22 GMT
தமிழகத்துக்கு கூடுதலாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகள் வந்துள்ளன என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மத்திய அரசிடம் இருந்து 2-வது கட்டமாக நேற்று கூடுதலாக ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகள் தமிழகத்துக்கு வந்தது. அதனை பாதுகாப்பாக வைப்பதற்காக பொது சுகாதாரத்துறை வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு குளிர்பதன கிடங்கில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் ஆய்வு செய்தனர். இதையடுத்து நிருபர்களிடம் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தமிழகத்துக்கு ஏற்கனவே 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகளும், 20 ஆயிரம் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துகளும் என மொத்தம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 தடுப்பு மருந்துகள் வந்துள்ளது. இன்று (நேற்று) கூடுதலாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகள் மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து தமிழகத்துக்கு வந்துள்ளது.

இதுவரை தமிழகத்துக்கு10 லட்சத்து 65 ஆயிரம் தடுப்பு மருந்துகள் மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. ஒருவருக்கு 2 ‘டோஸ்’ என கணக்கிட்டால் 5 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட முடியும்.
தமிழகத்தில் 6 லட்சம் முன்கள பணியாளர்களை கண்டறிந்துள்ளோம். அவர்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுகக்கு நேற்று முன்தினம் வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளிலும், புதிய மையங்கள் தொடங்க அதிகமான விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி போடுவதற்கு டாக்டர்கள், செவிலியர்கள் மத்தியில், ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது என்பது உண்மை. இருந்தாலும், அந்த தயக்கங்களை ஓரங்கட்டி, அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டு வருகின்றனர்.

டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும் தன்னம்பிக்கை அளிப்பதற்காக, ஒரு அமைச்சராக இல்லாமல், டாக்டராக நாளை (வெள்ளிக்கிழமை) நான் தடுப்பூசி போட்டு கொள்கிறேன். .

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News