செய்திகள்
கைது

தனது வீட்டுக்கு தண்ணீர் வராததால் ஆத்திரம்- குடிநீரில் வி‌ஷம் கலந்த விவசாயி கைது

Published On 2021-01-20 07:44 GMT   |   Update On 2021-01-20 07:44 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டுக்கு தண்ணீர் வராத ஆத்திரத்தில் குடிநீரில் விஷம் கலந்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே புலிவந்தி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 34). விவசாயி.

சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி ஏதோ செய்து கொண்டிருந்தார்.

இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். அவர்கள் பாலமுருகனை பார்த்து, குடிநீர் தொட்டியில் ஏறி நின்று கொண்டு என்ன செய்கிறாய்? என்று கேட்டனர்.

அதற்கு அவர், எனது வீட்டுக்கு குடிநீர் வராததால் இந்த தொட்டியில் உள்ள தண்ணீரில் வி‌ஷம் கலந்து உள்ளேன் என்றார்.

இதை கேட்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து செஞ்சி ஒன்றிய அதிகாரிகளுக்கும், அனந்தபுரம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் தண்ணீர் உடனே நிறுத்தப்பட்டது.

தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அந்த தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த குடிநீரை வெளியேற்ற உத்தரவிட்டனர். அதன் பின்னர் அந்த குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புதிதாக அந்த தொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டு பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அனந்தபுரம் போலீசில் கிராம நிர்வாக அதிகாரி தமிழ்வாணன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் குடிநீரில் வி‌ஷம் கலந்தது, பொது அமைதிக்கு குந்தகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.
Tags:    

Similar News