செய்திகள்
வாக்காளர் பட்டியல்

ஆண்களை விட பெண்கள் அதிகம்- தமிழ்நாட்டில் 6.26 கோடி வாக்காளர்கள்

Published On 2021-01-20 07:17 GMT   |   Update On 2021-01-20 07:17 GMT
தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர்கள் பட்டியலில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.
சென்னை:

வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்க மற்றும் ஏற்கனவே உள்ள பெயர்களை நீக்க ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி நடைபெறும்.

அதன்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.

இதற்காக முதலில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து திருத்தப்பணிகள் தொடங்கின.

1.1.2021 தேதியை 18 வயது தகுதி நாளாக கொண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பட்டியலில் பெயர்களை சேர்க்கும்படி 21 லட்சத்து 82 ஆயிரத்து 120 விண்ணப்பங்கள் வந்தன. அதில் 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதே போல 5 லட்சத்து 9 ஆயிரத்து 307 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இறப்பு, மாறுதல், போலி பெயர்கள் போன்ற காரணங்களால் அவர்கள் நீக்கப்பட்டனர்.

பட்டியலில் திருத்தம் செய்வதற்காக 3 லட்சத்து 32 ஆயிரத்து 743 விண்ணப்பங்கள் வந்திருந்தன. அதில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 292 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஒரே தொகுதியில் மாற்று முகவரியில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்ய கேட்டு 1 லட்சத்து 82 ஆயிரத்து 791 விண்ணப்பங்கள் வந்தன. அதில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 365 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதைத் தொடர்ந்து இன்று வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாடு முழுவதும் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் ஆண்கள்- 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர் உள்ளனர். பெண்கள் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பேர் இருக்கிறார்கள். இத்துடன் 3-ம் பாலித்தவர் 7 ஆயிரத்து 246 பேர் உள்ளனர்.

மாநிலத்திலேயே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியில் தான் அதிக வாக்காளர்கள் உள்ளனர். அங்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 ஆகும்.

இதில் ஆண்கள்-3 லட்சத்து 48 ஆயிரத்து 262 பேர், பெண்கள்- 3 லட்சத்து 46 ஆயிரத்து 476 பேர். இவர்களோடு 3-ம் பாலித்தனவர் 107 பேர் உள்ளனர்.

இதே போல மாநிலத்திலேயே குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதி உள்ளது. இங்கு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 பேர். அவர்களில் 91 ஆயிரத்து 936 ஆண்களும், 84 ஆயிரத்து 281 பேர் பெண்களும் உள்ளனர். மேலும் 55 பேர் 3-ம் பாலித்தவர்.

இத்துடன் 47 வெளிநாட்டுவாழ் இந்தியர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் 18 வயதில் 19 வயதுக்குட்பட்டவர்கள் 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆண்கள் 4 லட்சத்து 80 ஆயிரத்து 953 பேர், பெண்கள் 4 லட்சத்து 16 ஆயிரத்து 423 பேர். 3-ம் பாலித்தவர் 318 பேர்.

புதிய வாக்காளர் பட்டியல் தேர்தல் அலுவலக இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதை பார்த்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

1.1.2021 தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேராமல் இருந்தால் அவர்கள் மீண்டும் சேர வழிகள் உள்ளன.

அதன்படி தேர்தல் பணி அதிகாரிகளை நேரில் சந்தித்து 6-வது பிரிவு விண்ணப்ப பாரத்தை நிரம்பி கொடுக்க வேண்டும் அல்லது www.nvsp.in என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர்களுக்கு உதவுவதற்காக கூகுள்பிளே-வில் ஒட்டர்ஸ் ஹெல்ப்லைன் செயலி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை தெரிந்துக்கொள்ள 1950 என்ற டோல்பிரி நம்பரிலும் தொடர்பு கொள்ளலாம்.
Tags:    

Similar News