செய்திகள்
கைது

விவசாயிகளுக்கு கடன் வழங்குவதாக கூறி வங்கியில் ரூ.1 கோடி கையாடல் செய்த மேலாளர் கைது

Published On 2021-01-20 07:14 GMT   |   Update On 2021-01-20 07:14 GMT
விவசாயிகளுக்கு கடன் வழங்குவதாக கூறி வங்கியில் ரூ.1 கோடி கையாடல் செய்த மேலாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை:

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. இதில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.1 கோடியே 86 லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு வங்கி மேலாளர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பணம் கையாடல் செய்யப்பட்டபோது வங்கி மேலாளராக இருந்த உளுந்தூர்பேட்டை கார்த்திகேயன், காசாளர் இளஞ்செழியன் மற்றும் ஊழியர் விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து ரூ.1 கோடியே 86 லட்சம் வங்கி பணத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

விவசாயிகளுக்கு கடன் வழங்குவதாக கூறி விவசாயிகளுக்கு தெரியாமல் அவர்களது வங்கி கணக்கில் பணத்தை போட்டு பின்னர் அந்த பணத்தை மோசடியாக எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து கார்த்திகேயன், இளஞ்செழியன், விக்னேஷ் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடிவந்தனர். போலீசார் தங்களை தேடுவதை அறிந்த 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

இதனையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் அவர்களை தேடி வந்தனர். கார்த்திகேயன் அவரது சொந்த ஊரான உளுந்தூர்பேட்டையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்படைபோலீசார் உளுந்தூர்பேட்டைக்கு விரைந்து சென்றனர். பின்னர் உளுந்தூர்பேட்டை போலீசாரின் உதவியுடன் வீட்டில் பதுங்கி இருந்த கார்த்திகேயனை கைது செய்தனர்.

மேலும் கார்த்திகேயனின் வீட்டில் இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை நாகப்பட்டினத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

Tags:    

Similar News