செய்திகள்
நீதிமன்றம்

மனைவியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை- மகிளா கோர்ட்டு தீர்ப்பு

Published On 2021-01-20 03:19 GMT   |   Update On 2021-01-20 03:19 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் மனைவியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சொக்குபிள்ளைபட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் சசிக்குமார் (வயது 37). இவர், இளநீர் வெட்டும் தொழிலாளி ஆவார். அவருடைய மனைவி மல்லிகா (25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சசிக்குமார் வேலைக்கு சென்று விட்டு மல்லிகாவிடம் சம்பளத்தை முழுமையாக கொடுப்பதில்லை என்று, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அதன்படி கடந்த 8.7.2014 அன்று இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த மல்லிகா வீட்டுக்கு வெளியே உள்ள திண்ணையில் அமர்ந்து இருந்தார்.

அப்போது சசிக்குமார் ஆத்திரத்தில் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார். பின்னர் அவர் அரிவாளால் மனைவி மல்லிகாவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சசிக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி புருஷோத்தமன் அந்த வழக்கை விசாரித்தார். விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சசிக்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
Tags:    

Similar News