செய்திகள்
ரவீந்திரன்-கார்த்திக்

சென்னையில் சொகுசு கார் மோதி 2 போலீஸ்காரர்கள் பலி

Published On 2021-01-20 02:15 GMT   |   Update On 2021-01-20 02:15 GMT
சென்னை முகப்பேரில் அதிவேகமாக ஓட்டி வந்த சொகுசு கார் மோதி 2 போலீஸ்காரர்கள் பரிதாபமாக பலியானார்கள்.
திரு.வி.க.நகர்:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 32). இவர் குடும்பத்துடன் ஆவடியில் வசித்து வந்தார். இதேபோல் திருப்பூரை சேர்ந்தவர் கார்த்திக் (34). இவர் ஆவடி அடுத்த அண்ணனூரில் அறை எடுத்து தங்கி வந்தார். இவர்கள் இருவரும் சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரர்களாக பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு இவர்கள் 2 பேரும், கோயம்பேட்டில் பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக ஓரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரவீந்திரன் ஓட்டி வந்தார்.

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் சாலையில் முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வலைவில் திரும்பியபோது, எதிர் திசையில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த ரத்த காயம் அடைந்த ரவீந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் உயர் அதிகாரிகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று போலீஸ்காரர் கார்த்திக் உடல் நலம் குறித்து டாக்டரிடம் விசாரித்தனர்.

இந்நிலையில் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 11 மணிக்கு உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான சொகுசு காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அதில், காரின் உரிமையாளரான நொளம்பூரைச் சேர்ந்த வருண் சேகர் (20), அம்பத்தூரை சேர்ந்த அம்ரத் (25), கே.கே. நகரைச்சேர்ந்த ரோகித் சூர்யா (21) ஆகியோர் வந்தது தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் ராமாவரத்தில் உள்ள தனியார் கல்லூரி பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருவதாக தெரிகிறது. கே.கே நகரில் உள்ள ரோகித் சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு வரும்போது இந்த விபத்து நடந்ததாக போலீசாரிடம் அவர்கள் தெரிவித்தனர். காரை ஓட்டி வந்த அம்ரத் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே விபத்து நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் போலீஸ்காரர்கள் 2 பேரும் விபத்துக்குள்ளாகும் நெஞ்சை பதறவைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அதில், மோட்டார் சைக்கிள் வளைவில் திரும்பும் போது, அதிவேகமாக வரும் சொகுசு கார் மோதியதில், போலீஸ்காரர்கள் இருவரும் பல அடி உயரத்திற்கு தூக்கி வீசப்படுவது தெரிகிறது.

பலியான 2 போலீஸ்காரர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்து சென்னை மாநகர ஆயுதப்படைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News