செய்திகள்
வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

Published On 2021-01-19 20:27 GMT   |   Update On 2021-01-19 20:27 GMT
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான சுருக்க திருத்த பணிகள் நிறைவடைந்தன. இதுவரை பெயர் சேர்ப்பதற்கோ, திருத்துவதற்கோ, இடம் மாறியதற்காகவோ விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதன்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நவம்பர் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்று முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, நேரடியாகவும், 'ஆன்லைன்' வழியாகவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் தலா இரண்டு நாட்கள் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 

அந்த வகையில் கடந்த நவம்பர் 16–ம் தேதி தொடங்கி டிசம்பர் 14–ம் தேதி வரை பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக 29 லட்சத்து 72 ஆயிரத்து 899 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து வேறு சட்டமன்ற தொகுதிக்கு இடம் பெயர்தல் (படிவம் 6) ஆகியவற்றுக்கு 20 லட்சத்து 62 ஆயிரத்து 424 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள. வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 3 லட்சத்து 27 ஆயிரத்து 991 பேரும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்வதற்கு 1 லட்சத்து 83 ஆயிரத்து 253 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இவற்றை பரிசீலித்து தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி டிசம்பர் 15-ம் தேதி முதல் நடந்து வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
Tags:    

Similar News