செய்திகள்
கண்காணிப்பு கேமரா

குற்றச்செயல்களை தடுக்க போலீஸ் நிலைய எல்லைக்குள் 100 கண்காணிப்பு கேமராக்கள்

Published On 2021-01-19 17:43 GMT   |   Update On 2021-01-19 17:43 GMT
கோவையில், குற்றச்செயல்களை தடுக்க போலீஸ் நிலைய எல்லைக்குள்ளும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மாநகர குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் தெரிவித்தார்.
கோவை:

கோவை ரத்தினபுரி ராஜேந்திரபிரசாத் வீதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 42), நெய் வியாபாரி. இவர் வீட்டை பூட்டி விட்டு பெங்களூரு சென்றிருந்தபோது கடந்த 16-ந் தேதி அந்த வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் 100 பவுன் நகையை திருடி சென்றனர். இதுகுறித்து துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வழக்கில் இதுவரை துப்பு எதுவும் துலக்கவில்லை.

இதுகுறித்து கோவை குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் உமா கூறியதாவது:-

கடந்த சில நாட்களாக கோவையின் கிழக்கு உட்கோட்ட பகுதியில் கொள்ளை சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதை தடுப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி ஒரு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் குறைந்தபட்சம் 100-ம் அதற்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தனியார் உதவியுடன் இவை பொருத்தப்பட உள்ளன. ஒரு வீட்டில் 2 கேமராக்கள் பொருத்தினால் ஒரு கேமராவை சாலையை நோக்கியும், மற்றொரு கேமரா வீட்டின் நுழைவு வாயிலை நோக்கியும் இருக்குமாறு பொருத்தப்பட உள்ளது. இதன் மூலம் குற்றச்செயல்களை தடுக்க முடியும். கோவை ரத்தினபுரி பகுதியில் நெய் வியாபாரி வீட்டில் 100 பவுன் கொள்ளை போனது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் உள்ள அடகு கடைகளுக்கு அதிக அளவில் நகைகளை அடகு வைக்க யாராவது வருகிறார்களா? அப்படி வந்தால் அவர்கள் பற்றியும், தங்க கட்டியாக யாராவது விற்க வந்தாலும் அவர்களை பற்றி உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெய் வியாபாரி வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை என்பதை தெரிந்த நபர்கள் தான் கைவரிசை காட்டியுள்ளனர். எனவே அவர் வெளியூர் செல்கிறார் என்பதை யார்-யாருக்கு சொன்னார் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொள்ளை நடந்த வீட்டில் கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவாகி உள்ளன. அவற்றை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஏற்கனவே உள்ள கைரேகைகளோடு தனிப்படை போலீசார் ஒப்பிட்டு வருகிறார்கள். சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் இந்த வழக்கில் துப்பு துலக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இருந்தபோதிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதால் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News