செய்திகள்
கைது

வீட்டில் பதுக்கிய 260 கிலோ கஞ்சா பறிமுதல்- தந்தை, 2 மகன்கள் கைது

Published On 2021-01-19 10:03 GMT   |   Update On 2021-01-19 10:03 GMT
இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 260 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தந்தை மற்றும் 2 மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம்:

மதுரை அருகே திருமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் சந்தேகத்திற்கு இடமான ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இவரிடம் கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராமநாதபுரத்திற்கு அவர் கஞ்சாவை அனுப்பி வைத்தது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை போலீசார் ராமநாதபுரம் வந்து உள்ளுர் போலீசார் உதவியுடன் நேரு நகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். ராமநாதபுரம் நேருநகர் 6-வது தெருவை சேர்ந்த நவாஸ்கான்(வயது 53) என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அந்த மூடைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த கஞ்சாவை கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்ததும், இதற்காக கேரளாவில் இருந்து தேனி வழியாக மதுரை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ராமநாதபுரத்திற்கு கஞ்சாவை பாதுகாப்பாக பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதைதொடர்ந்து நவாஸ்கான் மற்றும் அவரின் மகன்கள் வாசிம்கான்(27), அப்துல்பாசித்(20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 260 கிலோ கஞ்சா, 2 எடை மிஷின்கள், 20 பாலிதீன் கவர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களை கேணிக்கரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த கஞ்சா கடத்ததில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதைதொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் ராமேசுவரம் ராஜேஸ்குமார்(31), தினேஷ்குமார்(31), நூர்முகமது(48), பாம்பன் யாசர் அராபத்(35), மண்டபம் ரமேஷ்(41), களஞ்சியம்ராஜ்(40) ஆகிய 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இங்கு ஒரு கிலோ கஞ்சா ரகத்திற்கு ஏற்றவாறு ரூ.2, 500 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் இலங்கையில் இந்த கஞ்சா ஒரு கிலோ ரூ.25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இதன்படி கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News