செய்திகள்
பள்ளியில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்த ஊழியர்கள்

பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனைத்து பள்ளிகளிலும் அதிகாரிகள் குழு ஆய்வு

Published On 2021-01-18 07:25 GMT   |   Update On 2021-01-18 07:25 GMT
சென்னை மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி அனிதா தலைமையில் 74 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை:

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த 9 மாதமாக மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வீடுகளில் இருந்து ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வழியாக பாடங்களை படித்து வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்ததால் 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. பெற்றோர்களிடம் கருத்து கேட்டதில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்புடன் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்தனர்.

இதையடுத்து நாளை (19-ந் தேதி) தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

12 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 15 லட்சம் மாணவ-மாணவிகள் நாளை முதல் பள்ளிக்கு வருகிறார்கள். மாணவர்கள் பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொள்ள பாடத்திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளன.

அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுவதால் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்கள் வீதம் அமர வைக்க வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முக கவசம், கிருமிநாசினி போன்றவற்றை அவசியம் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெற்றோரிடம் இருந்து விருப்ப கடிதம் பெற்றுவர வேண்டும். மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தை சார்ந்து இருக்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்குள் வரும் மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே சுற்ற அனுமதிக்கக்கூடாது. இறைவணக்க கூடல், விளையாட்டு வகுப்பு போன்றவற்றை நடத்த வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்த வேண்டும், வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட மாணவர்கள் செல்லக்கூடிய பகுதி முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். உடல் வெப்ப பரிசோதனைகருவி மூலம் மாணவர்களின் வெப்பத்தை கணக்கீடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து ஆசிரியர்களும் இன்று பள்ளிக்கு வர வேண்டும். ஆசிரியர்களுக்கு கால அட்டவணை தயாரித்து பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட வேண்டும்.

பாட ஆசிரியர்களை தவிர மற்றவர்கள் மாணவர்களை கண்காணித்தல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற பயன்படுத்த வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய கல்வி அதிகாரிகள் தலைமையில் தனி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வி அதிகாரிகள் குழுக்களாக சென்று பள்ளிகளில் இன்று ஆய்வு செய்து வருகிறார்கள். அரசு, உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 முதல் 70 குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிகளில் வகுப்பறைகள் காற்றோட்டமாக உள்ளதா? போதிய இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளதா? கழிப்பிடங்கள் தூய்மையாக உள்ளதா? என ஆய்வு நடத்துகின்றனர்.
பாதுகாப்பு பணிகளை தீவிரமாக கண்காணிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி அனிதா தலைமையில் 74 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னையில் பள்ளி கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் ஷெனாய்நகரில் உள்ள திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆய்வு செய்தார். பள்ளிக்கு வரும் மாணவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பெற்றோர் உதவியுடன் செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். பள்ளி வளாகம், வகுப்பறைகளை ஆய்வு செய்த பின்னர் இயக்குனர் கண்ணப்பன் நிருபர் களிடம் கூறியதாவது:-

நாளை பள்ளிகளை திறப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிகள் ஆயத்தப்படுத்தி வருகின்றன. ஆசிரியர்கள் முழு அளவில் பணியில் இருப்பார்கள். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் நடைபெறும். பொதுத்தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். ஆய்வக பரிசோதனைகளும் பாதுகாப்புடன் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்டு ஒருவாரத்துக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் மருத்துவ குழு செல்லும். மாணவர்களின் உடல்நிலையை பரிசோதனை செய்ய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் சானிடைசர் வைக்கப்படுகிறது. பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்ய அரசு பஸ் பயணத்துக்கு அனுமதி அளித்துள்ளது. பள்ளிசீருடை அணிந்து பழைய பஸ் பயண அட்டையுடன் வரும் மாணவ- மாணவிகளை பஸ்களில் அனுமதிக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News