கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து
பதிவு: ஜனவரி 18, 2021 11:34
கச்சத்தீவு புனித அந்தோணியார்
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் இந்தியா, இலங்கை நாடுகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு நடைபெற இருந்த கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மறைமாவட்டம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து யாழ்ப்பாணம் மறை மாவட்டம் மூலம் சிவகங்கை மறைமாவட்ட ஆயருக்கும், ராமேசுவரம் புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தைக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் ‘‘இந்த ஆண்டு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து ெசய்யப்படுவதாகவும், அடுத்த ஆண்டு திருவிழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் இரு நாட்டை சேர்ந்த மீனவர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த வாரம் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் திருவிழா நடைபெறும் எனவும் அதில் நெடுந்தீவு பங்குக்கு உட்பட்ட 150 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருவிழா முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :