செய்திகள்
ரஜினி மக்கள் மன்றம்

உறுப்பினர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்- ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு

Published On 2021-01-18 05:30 GMT   |   Update On 2021-01-18 08:11 GMT
ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையலாம் என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரவல் மற்றும் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சியை தொடங்கப்போவதில்லை என்று கடந்த மாதம் அறிவிப்பை வெளியிட்டார்.

முதலில் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறி இருந்ததால் அவரது ரசிகர்கள் புது கட்சி அறிவிப்புக்காக பலத்த எதிர்ப்பார்ப்புடன் காத்து இருந்தனர்.

ஆனால் ரஜினி அரசியலுக்கு முழுக்கு போட்டதால் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் நுங்கம்பாக்கத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஜினியின் வீட்டு முன்பும் ரசிகர்கள் கூடி கோஷம் எழுப்பினார்கள்.

இருப்பினும் ரஜினிகாந்த் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. நான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறிய பிறகும் என்னை கட்டாயப்படுத்துவது போராட்டங்களில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் சிலர் தி.மு.க.வில் இணைந்தனர்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று காத்து இருந்ததாகவும் அவரது முடிவு ஏமாற்றம் அளித்ததால் தி.மு.க.வில் இணைந்து பணியாற்ற முடிவு செய்தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகியான சுதாகர் பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News