செய்திகள்
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

104-வது பிறந்தநாள் விழா: எம்.ஜி.ஆர்.சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

Published On 2021-01-17 06:49 GMT   |   Update On 2021-01-17 06:49 GMT
அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நகரம் முதல் கிராமம் வரை ஒவ்வொரு பகுதியிலும் எம்.ஜி.ஆரின் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. கட்சி நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்திலும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலை, வளாகம் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. பிறந்தநாள் நிகழ்ச்சியை கொண்டாட தலைமைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள் காலை 9 மணி முதல் அங்கு வர தொடங்கினார்கள்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இருவரும் காலை 10.15 மணியளவில் தலைமைக்கழகம் வந்தனர்.

அப்போது தொண்டர்கள், ‘புரட்சி தலைவர் புகழ் ஓங்குக’ என்று வாழ்த்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.

அதன் பிறகு அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


அங்கிருந்த கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க. கொடியையும் ஏற்றி வைத்தனர். அங்கு கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் அவை தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், எம்.சி.சம்பத், செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, வைகை செல்வன், சோமசுந்தரம், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன்,

அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் முத்தியால் பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், கமலக்கண்ணன்,

மாவட்ட கழக செயலாளர்கள் தி.நகர் சத்யா, விருகை வி.என்.ரவி, வேளச்சேரி அசோக், ஆர்.எஸ்.ராஜேஷ், வெங்கடேஷ்பாபு, பால கங்கா, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் - பரங்கிமலை ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், காரப்பாக்கம் லியோ என்.சுந்தரம், துரைப்பாக்கம் டி.சி.கோ விந்தசாமி, மாணவர் அணி ராமலிங்கம், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் என்ற சின்னையன்,

ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயின், நொளம்பூர் இம்மானுவேல், முகப்பேர் இளஞ்செழியன், டாக்டர் சுனில், எஸ்.எஸ்.எஸ்.ராமு, தி.நகர் மின்சாரம் சத்திய நாராயணமூர்த்தி, சைதாப்பேட்டை வக்கீல் பழனி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வந்து பங்கேற்றனர்.
Tags:    

Similar News