செய்திகள்
திருமாவளவன்

எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தக் கூடாது- திருமாவளவன்

Published On 2021-01-17 06:45 GMT   |   Update On 2021-01-17 06:45 GMT
எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்துக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தக் கூடாது என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி துறை முகத்தின் விரிவாக்கமானது, அதானி குழுமத்தின் பேராதிக்கமாகும். எல் அண்ட் டி நிறுவனத்துக்குச் சொந்தமான அத்துறை முகத்தை தமதாக்கிக் கொண்ட அதானி குழுமம், தற்போது அதனை பல ஆயிரம் மடங்கு பரப்பளவில் விரிவாக்கம் செய்ய முனைகிறது. அதற்குச் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைக் கோரியுள்ளது.

மோடியின் தலைமையிலான அரசும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் கூட்டு சேர்ந்து அதானிக்கு ஒத்துழைத்து வருகின்றன. அதன்படி, வருகிற 22-ந் தேதி ‘பொதுமக்கள் கருத்துக் கேட்பு’ கூட்டத்தை நடத்த உள்ளன. தமிழக அரசு அதற்குரிய அறிவிப்பைச் செய்துள்ளது.

இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தக் கூடாது என கடுமையாக எதிர்க்க வேண்டும்.

இத்திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டால், அப்பகுதிவாழ் மீனவர்கள் மட்டுமின்றி, அனைத்துச் சமூக பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

ஏறத்தாழ நான்காயிரம் ஏக்கருக்கும் மேலான அளவில் நிலப்பரப்பை ஆக்கிரமிக்க உள்ளனர். அத்துடன், இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் கடலையும் தூற்று விரிவுப்படுத்த உள்ளனர்.

இதனால், கடல்நீரானது நிலப்பகுதியில் உட்புகும் பேரிடர் நிகழ வாய்ப்புள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் சென்னை பெருநகரத்துக்கும் பேராபத்து ஏற்படலாம். மீன்வளம் அழியும். கடல்வாழ் பன்ம உயிரினங்களும் அழிந்தொழியும்.

இத்தகைய பெரும்பாதிப்புகளை ஏற்படுத்த உள்ள இத்திட்டத்துக்கு மையஅரசு அனுமதியளிப்பதை பொதுமக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, ஜனநாயக சக்திகள் யாவரும் ஒருங்கிணைந்து இதனை முறியடிக்க முன்வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News