செய்திகள்
வைகை அணை

முழு கொள்ளளவை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்

Published On 2021-01-17 05:12 GMT   |   Update On 2021-01-17 05:12 GMT
வைகை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் கடந்த ஒரு வாரத்தில் 10 அடிக்கும் மேலாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று 69 அடியை எட்டியதும் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று காலை அணையின் நீர்மட்டம் 69.75 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 394 கன அடி நீர் திறக்கப்படுகிறது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணைக்கு 2593 கன அடி நீர் வருகிறது. வழக்கமாக 69 அடியை எட்டியதும் உபரி நீர் முழுவதுமாக வைகை ஆற்றில் திறக்கப்படும். ஆனால் தற்போது முழு கொள்ளளவான 71 அடி வரை தண்ணீரை தேக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.65 அடியாக உயர்ந்துள்ளது. 2483 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. 162 கன அடி நீர் வருகிறது. 70 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. 165 கன அடி நீர் வருகிற நிலையில் 27 கன அடி பாசனத்திற்காகவும் மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், வைகை அணை நீர்மட்டம் இன்று அல்லது நாளைக்குள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 58-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் திறக்கப்படுகிறது. முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

பெரியாறு 2.8, தேக்கடி 10.2, கூடலூர் 5.3, உத்தமபாளையம் 2.3, வீரபாண்டி 7.8, வைகை அணை 0.6, ஆண்டிபட்டி 3.2, அரண்மனைபுதூர் 4, போடி 2.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News