செய்திகள்
முக ஸ்டாலின்

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- தமிழக அரசுக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தல்

Published On 2021-01-17 01:06 GMT   |   Update On 2021-01-17 01:06 GMT
மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிவர் புயலில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு, இந்த “மார்கழி மழை” பேரிடியாகவே வந்திருப்பதை, ஏனோ இன்னும் அ.தி.மு.க. அரசு உரிய முறையில் அணுகுவதாகத் தெரியவில்லை. வடி வாய்க்கால்களைத் தூர்வாரும் பணியில் கோட்டைவிட்ட அ.தி.மு.க. அரசு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதிலும் கோட்டைவிட்டு, குறட்டை விட்டுத் தூங்குகிறது.

நிவர் புயல் பாதிப்பிற்குள்ளான நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஏற்காத அ.தி.மு.க. அரசு, ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என்று செய்த அறிவிப்பு, விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அறிவிக்கப்பட்ட அந்த நிவாரணமும் இன்னும் முழுமையாக தங்கள் கைகளுக்கு வந்து சேரவில்லை எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குமுறுகிறார்கள், கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகையும் பெரும்பாலான விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. இப்போது பெய்துள்ள கனமழையால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு மேல் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகி, அரசின் நிவாரணம் ஏதும் இதுவரை கிடைக்காமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வேளாண் நிலங்களில் கடல் போல் நிரம்பியிருக்கும் தண்ணீரையும், அதில் மூழ்கிக் கிடக்கும் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்களையும் பார்த்து விவசாயிகள் கண்கலங்கி, கையறு நிலையில் புலம்பி நிற்பதை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது.

ஏற்கனவே நிவர் புயலுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட ரூ.600 கோடி நிவாரணத் தொகை என்ன ஆனது? எத்தனை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் போய்ச் சேர்ந்தது? மத்திய பா.ஜ.க. அரசிடம் கோரிய ரூ.3,758 கோடி நிதி என்ன ஆனது? என்பது எல்லாம் மர்மமாக இருக்கும் நிலையில், இப்போது ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு விவசாயிகளின் வாழ்வில் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுபோன்ற சூழலில், நாசமாகியுள்ள நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல், “இனிமேல்தான் கணக்கு எடுக்கப் போகிறோம்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலிருக்கிறது.

ஆகவே, மார்கழி மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் உடனடியாக நிவாரணத் தொகையை அறிவிக்க வேண்டும் என்றும்; ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்குவதை உறுதிசெய்து, பயிர்க் காப்பீட்டுத் தொகையும் எவ்வித தாமதமுமின்றி கிடைப்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News